“தேர்தல் நேரத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படாது என வாக்குறுதி அளித்துவிட்டு தற்போது கட்டணத்தை உயர்த்துவதாக அரசு அறிவித்துள்ளது கண்டனத்திற்குரியது” என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் “நிர்வாகத்தை ஒழுங்காக நடத்தாமல் கட்டண உயர்வுக்கு மத்திய அரசு மீது குறை கூறுகின்றனர்” என்ற குற்றச்சாட்டையும் மாநில அரசு மீது வைத்துள்ளார் அவர்.
காவல்துறை அதிகாரிகள் தன்னை கைது செய்யும்போது மனித உரிமைகளை மீறி செயல்பட்டதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்திருந்தார். இதற்கான விசாரணையில் இன்று அவர் ஆஜரானார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “எனது கைதின் போது உடைமாற்ற அனுமதிக்கவில்லை; நாற்காலியில் இருந்து வலுக்கட்டாயமாக இழுத்து சென்றனர்; மருந்து மாத்திரைகள் எடுக்கவும்கூட அனுமதிக்கவில்லை.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அரசியல் கைதிகளுக்கான முதல் வகுப்பு வசதிகள் இல்லாத பூந்தமல்லி சிறையில் கொசுக்கடிக்கு இடையில் அடைத்தனர். 2 நாட்கள் அங்கேயே வைத்தனர். இப்படி பல ஆண்டுகளாக அரசியலில் உள்ள எனக்கே பல்வேறு மனித உரிமைகள் மீறல்கள் நடைபெற்றது. எனவே இதுதொடர்பாக 8 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்ததாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “எதிர்கட்சி துணைத் தலைவராக யாரை நியமனம் செய்ய வேண்டும் என்பதை தலைமை தான் முடிவு செய்ய வேண்டும். அதனையே தற்போது அவர்கள் அறிவித்துள்ளனர். சபாநாயகர் இந்த நியமனத்திற்கு ஒப்புதல் அளித்து தான் ஆக வேண்டும். ஓபிஎஸ் உட்பட
யார் வேண்டுமானாலும் கடிதம் தரலாம். ஆனால் அதிகாரமும் அங்கீகாரம் யாரிடம் உள்ளதோ அவர்கள் சொல்லுவதை தான் சபாநாயகர் கேட்க வேண்டும்” என தெரிவித்தார்.
மேலும், “நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, `மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும்; இல்லையென்றால் உங்களுக்கு வழங்கப்படும் மானியங்கள் ரத்து செய்யப்படும்’ என காங்கிரஸ் தெரிவித்தது. அதற்காக நாங்கள் பயப்படவில்லை. கட்டணத்தையும் உயர்த்தவில்லை. மாறாக நாங்கள் சலுகையை அறிவித்தோம். ஆனால் தேர்தல் நேரத்தில் `மின் கட்டணத்தை உயர்த்த மாட்டோம்’ என தெரிவித்த ஸ்டாலின், தற்போது மின் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளார்.
மின்சார கட்டணம் உயர்வால் பொதுமக்கள் வாழ்வில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்!? பொருளாதார வல்லுனர்கள் குழு அமைத்துள்ளோம் என சொல்கிறார்கள். அந்தக் குழு அமைத்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிறது. அவர்கள் மக்கள் வாழ்கையில் என்ன மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர்? அரசு கஜானாவை நிரப்ப அவர்கள் என்ன ஆலோசனை வழங்கினார்கள்? நிர்வாகம் செய்ய தெரியாமல் மின் கட்டணத்தை உயர்த்திகொண்டு மத்திய அரசு மேல் பழி சுமத்தி வருகின்றனர்” என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM