முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்த வழக்கில், பாஜக முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மாவை கைது செய்ய இடைக்கால விதித்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்தார். இந்த விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
நுபுர் சர்மாவின் கருத்துக்கு, கத்தார், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அரேபிய நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இதை அடுத்து, பாஜகவில் இருந்து நுபுர் சர்மாவை நீக்கி அக்கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்தது. மேலும், நுபுர் சர்மாவுக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல், போராட்டங்களும் நடைபெற்றன.
இதை அடுத்து, தனக்கு எதிராக நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரியும், கைது செய்வதிலிருந்து பாதுகாப்பு கோரியும், நுபுர் சர்மா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதை வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், நுபுர் சர்மா மீது, வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி வரை, எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும், அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள மாநிலங்கள் பதிலளிக்கவும் உத்தரவிட்டனர். இந்த வழக்கு வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.