புதுடெல்லி: “காவரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதித்தால், அக்கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்வோம்” என்று தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “மேகதாது அணை விவகாரம் தொடர்பான வழக்கு நாளை வரவிருக்கிறது. அது தொடர்பாக வழக்கறிஞர்களுடன் பேசுவதற்காக நான் வந்துள்ளேன். எங்களுடைய வாதத்தில் நியாயம் இருக்கிறது. நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள காவரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் விவாதப் பொருளாக வைக்கப்பட்டிருந்தாலும், கூடுமான வரையில் கண்டிப்பாக எதிர்ப்போம். மேகதாது குறித்து விவாதிக்கக்கூடாது என்று சொல்வோம்.
நாளை மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்து வலியுறுத்த இருக்கிறேன். அதையும் மீறி விவாதித்தால், நாங்கள் வெளிநடப்பு செய்வோம்” என்று அவர் தெரிவித்தார்.