44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நேரில் அழைப்பு

டெல்லி: பிரதமர் மோடியிடம் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான அழைப்பிதழை தமிழ்நாடு முதலமைச்சரின் சார்பில் அமைச்சர் மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு மற்றும் கனிமொழி, தலைமைச் செயலாளர் ஆகியோர் வழங்கினார்கள். கொரோனா நோய்த்தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15.7.2022 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்தார்.அப்போது முதலமைச்சர், சென்னையில் 28.7.2022 அன்று நடைபெறவுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவிற்கு அழைப்பு விடுக்க தான் நேரில் வருவதாக இருந்ததை குறிப்பிட்டு, தற்போது கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதால் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு மற்றும் கனிமொழி, தலைமைச் செயலாளர் ஆகியோரை அனுப்பி வைப்பதாகவும், தொடக்க விழா நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமர் மோடி அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருந்தார்.அதனைத் தொடர்ந்து, இன்று (19.7.2022) டெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு மற்றும் கனிமொழி, தலைமைச் செயலாளர் முனைவர் இறையன்பு ஆகியோர் சந்தித்து, 28.7.2022 அன்று சென்னையில் நடைபெறவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவிற்கான அழைப்பிதழையும், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான “தம்பி” சின்னத்தையும் வழங்கி, விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்தார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.