இந்திய ராணுவத்துக்கு புதிய முறையில் ஆள்சேர்க்கும் விதமாக, `அக்னிபத்’ எனும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருந்தது. மத்திய அரசின் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இளைஞர்கள் பெரியளவில் போராட்டத்தை நடத்தினார்கள். அந்தப் போராட்டங்கள் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
இருப்பினும், முப்படைகளின் அக்னிபத் திட்டத்தின் கீழ் இளைஞர்களை சேர்ப்பதில் மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களும் குவிந்து வருகின்றன.
இந்த நிலையில், அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கு வீரர்களை தேர்வு செய்யும்போது சாதிச் சான்றிதழ் கேட்கப்படுவதாக ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய்சிங் குற்றம்சாட்டினார். மேலும், இது தொடர்பாக மாநிலங்களவையிலும் இன்று கேள்வி எழுப்பப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துப் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “ராணுவ வீரர்கள் தேர்வில் சாதி பார்க்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு உண்மையல்ல… அது வெறும் வதந்தி. சுதந்திரத்துக்கு முன்பிருந்த நடைமுறையே தற்போதும் தொடர்ந்து வருகிறது. அதில் எந்த மாற்றமும் கிடையாது” என்றார்.