மின் கட்டண உயர்வு கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ் அறிவிப்பு

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் அ.தி.மு.க சார்பில் ஜூலை 25 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி திங்கள்கிழமை அறிவித்தார். மின் கட்டணம் உயர்த்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், மின் கட்டண உயர்வை கண்டித்து ஜூலை 25 ஆம் தேதி தமிழகம் முழுவதும் அதிமுக அமைப்பு ரீதியாக மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

வீட்டு வரி உயர்வு முதல் மின் கட்டண உயர்வு வரை தமிழக மக்களை வாட்டி வதைக்கும் விடியா திமுக அரசைக் கண்டித்து அதிமுக அமைப்பு ரீதியான மாவட்டத் தலைநகரங்களில் ஜூலை 25 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “மத்தளத்திற்கு இரண்டு பக்கம் இடி, இந்த விடியா திமுக ஆட்சியில் அப்பாவி மக்களுக்கு நான்கு பக்கமும் இடி வாங்கி நசுங்கி, தத்தளித்துக்கொண்டிருக்கிறார்கள்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு, வேலை வாய்ப்பின்மை, வருமான இழப்பு என்று சிக்கி அன்றாட வாழ்வை நடத்த முடியாமல் விழி பிதுங்கி நிற்கும் தமிழக மக்கள், தற்போதுதான் மெல்ல மெல்ல தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்துகொண்டிருக்கின்றனர்.

மக்களைக் காப்பாற்றுவதற்காகவே அவதாரம் எடுத்த திராவிட மாடல் நாங்கள் தான் என்று தம்பட்டம் அடித்து, வாய்ச் சவடால் வீரர்களாகத் திரியும் விடியா திமுக அரசின் ஆட்சியாளர்கள் மக்களை வஞ்சிக்கும் செயல்களையே தொடர்ந்து செய்து வருகிறார்கள். எதிர்க்கட்சிகள் மீது பொய் வழக்கு போடுவதையும், மாற்றுக் கருத்து தெரிவிப்பவர்களை, “இம் என்றாஅல் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம்” என்று காரா கிருஹத்திற்குள் அடைக்கும் செயல் ஒன்றையே கண்ணும் கருத்துமாக செய்துவரும் இந்த விடியா திமுக அரசு, மக்களைக் காக்கும் கடமையில் இருந்து தவறுகிறது.

2022-23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை விடியா திமுக அரசு தாக்கல் செய்யும்போது, வரியில்லா பட்ஜெட் அளித்திருக்கிறோம் என்று மார்தட்டிவிட்டு, துறை தோறும் ஏதாவது ஒரு விதத்தில் வரி உயர்வு, கட்டண உயர்வு என்று அறிவித்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

*மின் கட்டண உயர்வு
*சொத்துவரி உயர்வு, குடிநீர், கழிவுநீர் இணைப்பு கட்டணங்கள் உயர்வு
*விலைவாசி உயர்வு
*சட்டம், ஒழுங்கு சீர்கேடு
*சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திமுக அளித்த முக்கிய வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றாதது.

உள்பட, மக்களின் அன்றாட அத்தியாவசியத் தேவைகளான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், காய்கறிகள் போன்றவற்றின் இமாலய விலை உயர்வுகளால், பரிதவிக்கும் அப்பாவி மக்களை இந்தக் கொடுங்கோல் ஆட்சியின் கொடூரக் கரங்களில் இருந்து காப்பாற்றும் வகையில், அதிமுக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும், சென்னையைப் பொறுத்தமட்டில் ஒருங்கிணைந்த சென்னை மாநகரிலும் 25.07.2022 திங்கள்கிழமை காலை 10 மணி அளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட அதிமுக மாவட்டச் செயலாளர்கள் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

பொதுமக்கள் நலனை முன்வைத்து, கழக அமைப்பு மாவட்டங்களில் நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்களும் முன்னாள் அமைச்சர்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகளும் கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு, மக்களின் அவலங்களைக் கேட்காத, கேளா காதினராய் இருக்கும் இந்த விடியா ஆட்சியாளர்களின் செவிகளில் சென்று அடையும் வகையில் தங்களது கடும் எதிர்ப்பைத் தெரிவித்திட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்கும் கழக நிர்வாகிகளும், கழக தொண்டர்களும், பொதுமக்களும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று அறிவித்துள்ளார்.

முன்னதாக, எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்கள் மீது ஏற்கனவே சொத்து வரியை உயர்த்தி சுமை ஏற்றிய விடியா அரசு தற்போது மின் கட்டணத்தையும் உயர்த்தி மக்கள் தலையில் கடும் சுமையை சுமத்தியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது.” என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.