லக்னோ: ‘சரியான மழை பெய்யாத காரணத்தினால், தனது கடமையை சரியாக செய்யாத மழைக் கடவுளான இந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று உத்தரப் பிரதேச விவசாயி ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.
தன் கடமையைச் செய்யாத கடவுளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வருவாய்த் துறை அதிகாரிகளிடம் விவசாயி ஒருவர் புகார் அளித்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
உத்திரப் பிரதேச மாநிலம், கோண்டா மாவட்டத்தில் உள்ள ஜகலா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுமித் குமார் யாதவ். இவர் சனிக்கிழமை நடந்த சமாதன் திவாஸ் எனப்படும் குறைதீர் நாள் கூட்டத்திற்கு சென்று மழைக் கடவுளாக அறியப்படும் இந்திர பகவான் மீது புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், ‘மாவட்டத்தில் சரியான மழை இல்லாத காரணத்தால் மக்கள் அனைவரும் பெரும் கஷ்டத்திற்குள்ளாகி வருகின்றன. அதனால், மாவட்ட நீதிபதியாகிய நீங்கள் இந்திர பகவான் மீது இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
நடவடிக்கைக்கு பரிந்துரை:
இந்தப் புகார் மனுவினைப் பெற்றுக் கொண்ட வருவாய்த் துறை அதிகாரி மேல்நடவடிக்கைக்காக பரிந்துரைத்து அனுப்பியுள்ளார். இதுகுறித்து அவரிடம் கேட்ட போது “அப்படி ஒரு கடிதத்தை நான் மேல் நடவடிக்கைக்கு அனுப்பவில்லை” என்று மறுத்துள்ளார். என்றாலும், அவரின் கையெழுத்திட்ட அந்தக் கடிதம் சமூக வலைதளங்களில் பரவியுள்ளது.
இதுகுறித்து மற்றொரு அதிகாரி கூறும் போது, “சமாதன் திவாஸ் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான புகார் மனுக்கள் மக்களிடம் இருந்து வரும். அவைகள் அனைத்தையும் படித்து பார்க்க முடியாது என்பதால் அப்படியே மேல்நடவடிக்கைகாக பரிந்துரைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
சரியாக மழை பெய்யாத காரணத்தால் உத்தப் பிரதேசத்தில் உள்ள பல இடங்களில் உள்ள விவசாயிகள் மழைக்காக பல்வேறு சடங்குகளை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதில் விவசாயி ஒருவர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கும் அளவிற்கு சென்றுள்ளார்.