பேக் செய்யப்பட்ட அரிசி, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள்மீது 5 சதவிகித ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டதற்க்கு, மத்திய அரசை எதிர்க்கட்சிகள் பலவும் சாடி வருகின்றன.
முன்னதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சண்டிகரில் கடந்த ஜூன் 29-ம் தேதி நடைபெற்ற 47-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில், பல்வேறு பொருள்கள் மற்றும் சேவைகள்மீதான ஜி.எஸ்.டி வரி உயர்த்துவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதில் அரிசி, தயிர், மோர், லஸ்லி, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் பேக் செய்யப்பட்டிருந்தால், அதற்கு 5 சதவிகித வரி விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக இத்தகைய அத்தியாவசிய பொருள்களுக்கு ஜி.எஸ்.டி வரி இல்லை.
இந்த நிலையில், தற்போது உயர்த்தப்பட்டிருக்கும் 5% ஜி.எஸ்.டி வரிக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இன்றுகூட காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தலைமையில், ஜி.எஸ்.டி வரி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் போராட்டம் நடத்தியது.
இந்த நிலையில் , அத்தியாவசியப் பொருள்கள்மீதான ஜி.எஸ்.டி வரி உயர்வு குறித்து பா.ஜ.க-வை, காங்கிரஸைச் சேர்ந்த ராஜாஸ்தான் மாநில அமைச்சர் பிரதாப் கச்சாரியாவாஸ் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
தனியார் ஊடகத்திடம் பேசிய பிரதாப் கச்சாரியாவாஸ், “ஜி.எஸ்.டி-யை உயர்த்தியதன் மூலம் பா.ஜ.க பாவம் செய்கிறது. அவர்கள் தயிர் உட்பட அனைத்திற்கும் வரி விதித்திருக்கின்றனர். இது ஏழைகளுடன் நேரடியாக இணைக்கப்பட்ட பிரச்னை. இந்த நாட்டில் எதற்கு வரி விதிக்கப்படவில்லை என்றால், அது மதம் மட்டும்தான். ஏனெனில் பா.ஜ.க மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிரித்து வாக்குகளைப் பெற விரும்புகிறது” எனக் கூறினார்.