க.சண்முகவடிவேல், திருச்சி
கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததன் எதிரொலியாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் அதன் முழு கொள்ளளவை எட்டியது. எனவே, அணைகளுக்கு வரக்கூடிய உபநீர் அப்படியே திறந்து விடப்பட்டுள்ளதால், தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து. அந்த அணை நிரம்பியது.
இதனைத் தொடர்ந்து மேட்டூர் அணையிலிருந்து அணைக்கு வரக்கூடிய உபரிநீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் தற்போது வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஏற்கனவே திருச்சி, கரூர், நாமக்கல், ஈரோடு மாவட்ட ஆட்சியாளர்கள் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் திருச்சி மாவட்டம் முக்கொம்புக்கு மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட ஒரு இலட்சத்து 32 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதை முன்னிட்டு, முக்கொம்பு காவிரியாற்றில் 47874 கன அடியும், கொள்ளிடம் ஆற்றில் 65639 கன அடியும், பாசன வாய்க்காலில் ஆயிரம் கன அடியும் அய்யன்பெருவளை, புள்ளம்பாடி ஆகிய வாய்க்காலில் 875 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து நேற்று திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் முக்கொம்பு மேலணைக்குத் தண்ணீர் வரத்து மற்றும் திறப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை முழு கவனத்துடன் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் காவேரி கரையோரப் பகுதியான ஸ்ரீரங்கம்-கல்லணை சாலையில் உள்ள தரைப்பாலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்தது. இதனால் உத்தமர் சீலி, திருவளர்சோலை உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த சுமார் ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட வாழைகள், கரும்பு மற்றும் பிச்சிப்பூ ஆகியவற்றை காவிரி நீர் சூழ்ந்தது. காவிரியில் ஏற்பட்ட வெள்ளத்தால் விவசாய நிலம் நீரில் மூழ்கியதால் அப்பகுதி விவசாயிகள் வேதனடைந்துள்ளனர். அரசு பாதிக்கப்பட்ட வாழை பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தெரிவித்துள்ளனர். திருவளர்சோலை பகுதியில் உள்ள செங்கல் சூளைகளையும் காவிரி தண்ணீர் சூழ்ந்துள்ளதால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து காவிரி, கொள்ளிடம் கரையோரப் பகுதிகளில் காவல்துறையினர் தடுப்பு அமைத்து பொதுமக்களை ஆற்றில் இறங்க வேண்டாம் என எச்சரித்து கண்காணித்தும் வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”