இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தமிழக அரசு சார்பில் எம்.பி. சு.வெங்கடேசன் எழுப்பிய நீட் விலக்கு மசோதா குறித்த கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது. அந்த பதிலின்படி, மத்திய அரசு தமிழக அரசின் கடிதத்தை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பிவிட்டதாகவும் – அவர்கள் மூலமாக உரிய பதிலை தமிழ்நாடு அரசுக்கு வழங்கிவிட்டதாகவும் தெரிகிறது. மேற்கொண்டு தாங்கள் அளித்துள்ள பதில் மீதான தமிழக அரசின் மறு பதிலுக்காக மத்திய அரசு காத்திருப்பதாக தெரிகிறது.
மக்களவையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் இதுதொடர்பாக இன்று கேள்வி எழுப்பியபோது, அதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா தாங்கள் ஏற்கெனவே பதில் அளித்துவிட்டதாக தகவல் கூறினார். `தமிழக அரசின் நீட் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வு விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார். போலவே தமிழக அரசின் மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகம் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு (மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஆகிய துறைகளுக்கு) அனுப்பி வைத்துள்ளது.
இந்த இரண்டு துறைகளும் தங்களுடைய கருத்துகளை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளது. தமிழக அரசு இந்த கருத்துகளுக்கு தனது பதிலை தெரிவித்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும். இறுதி முடிவு எடுக்க எவ்வளவு அவகாசம் தேவைப்படும் என்பதை, இப்போதே முடிவு செய்ய வாய்ப்பு இல்லை’ என தெரிவித்தார். இவையன்றி, மத்திய அரசின் இரு துறைகள் என்ன பதிலை தமிழக அரசுக்கு வழங்கியது என்ற விவரம், இன்னும் வெளிவரவில்லை.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM