”குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டதை இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இன்று முதல்முறையாக வெளியே சொல்லியிருக்கிறேன்” என்று கூறினார் நடிகை ரோஹினி.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் மற்றும் குடும்ப வன்முறைகளுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிறப்பு மாநாடு பாரிஸ் கார்னரில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது. மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கேரள மாநில முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா, திரைக்கலைஞர் ரோஹினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மாநாட்டில் கள்ளக்குறிச்சி மாணவியின் மரணத்தில் சிபிசிஐடி முறையாக விசாரித்து, தவறிழைத்தவர்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும், மாணவியின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மாநாட்டில் பேசிய திரைக்கலைஞர் ரோஹினி, ”குடும்ப வன்முறையால் கடுமையாக பாதிக்கப்பட்டேன். அந்தக் குடும்பத்தில் இருந்து வெளியேறிய பின்னரும் எனக்கு இதை வெளியில் சொல்ல இத்தனை காலம் தேவைப்பட்டிருக்கிறது. இன்றுதான் நான் சந்தித்த குடும்ப வன்முறையை வெளியே சொல்லியிருக்கிறேன். பொருளாதார சுதந்திரம் பெற்றிருந்த நானே கொடுமைகளை சகித்துக் கொண்டுதான் வாழ வேண்டியிருந்தது என்றால் பொருளாதார சுதந்திரம் இல்லாத பெண்களின் நிலை என்ன? அவரால் என் மகனை வளர்க்க முடியாது. என்னால் மட்டும் தான் என் மகனை வளர்க்க முடியும் என்று ஒவ்வொன்றையும் பேசி பேசித் தான் பெற்றேன்” என்று கூறினார்.
சிபிஎம் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் பேசுகையில், ”குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கை கொடுக்கும் இயக்கமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கும். பெண்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கை இல்லாத காரணத்தினால் மனு கொடுக்கும் போராட்டமாக இல்லாமல் ஒரு மாநாடாக நடந்துகிறோம். பெண்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டிய வீட்டில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், ஏன் காவல்துறையில் உள்ள பெண்களுக்கும் பாதுகாப்பு இன்று இல்லை.
50 ஆண்டுகளுக்கு பிறகும் பெரியார் மண்ணில் அவர் கொள்கைகளை தாங்கி நிற்கும் மாநிலங்களில் குடும்ப வன்முறை இருக்கிறது. சதி, தேவதாசி, குழந்தை திருமணத்தை ஒழித்துக் காட்டியதுபோல் குடும்ப வன்முறையை ஒழிக்க மீண்டும் ஒரு மக்கள் இயக்கம் தேவைப்படுகிறது. ஆகஸ்ட் 1 முதல் 5 வரை தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் சிபிஎம் தொண்டர்கள் குடும்ப வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார இயக்கத்தை தொடங்க இருக்கிறோம். மனு நீதி முறை தான் பெண்களை அடிமைப்படுத்துகிறது.மனு நீதிக்கு தீயிடும் பணியை தொடங்கி வைப்போம்” என்று கூறினார்.
இதையும் படிக்கலாம்: பெரியார் பல்கலை. தேர்வில் சாதிரீதியான கேள்வி – விசாரணை நடத்த குழு அமைத்து அரசாணை வெளியீடு Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM