எல்லை பாதுகாப்புப் படை காவலர்கள் அந்த நபரைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர், அவர் இந்துமால்கோட் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
முகமது நபிகள் நாயகத்துக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவை கொலை செய்ய சர்வதேச எல்லையைத் தாண்டிய பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர், ராஜஸ்தானில் கடந்த வாரம் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் (பிஎஸ்எஃப்) கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் உள்ள மாண்டி பஹவுதீன் மாவட்டத்தில் வசிக்கும் ரிஸ்வான் அஷ்ரப் (24), ஸ்ரீகங்காநகர் செக்டார் பகுதியில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கோடு வேலி அருகே இருந்து பிடிபட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
“ஜூலை 16-17 நள்ளிரவில், ஒரு நபர் எல்லையைத் தாண்டி வேலிக்கு அருகில் வந்தார். எல்லை பாதுகாப்புப் படை காவலர்கள் அவருக்கு எதிப்பு தெரிவித்தனர். பின்னர், அந்த நபரை கைது செய்தனர். பின்னர் அவர் இந்துமால்கோட் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, அவரை விசாரிக்க பல ஏஜென்சி கூட்டு விசாரணைக் குழு (ஜேஐசி) அமைக்கப்பட்டது” என்று ஸ்ரீகங்காநகர் எஸ்பி ஆனந்த் சர்மா செய்தியாளர்களிடம் கூறினார்.
அந்த நபரிடம் இருந்து இரண்டு கத்திகள், ஒரு க்ளீவர், மூன்று மத புத்தகங்கள், ஒரு சீப்பு, தலை முடி எண்ணெய், டெஸ்டர், வரைபடம், உணவு, உடைகள் மற்றும் 2019 இல் வழங்கப்பட்ட பாகிஸ்தானின் தேசிய அடையாள அட்டை மற்றும் வேறு சில பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
“ஜேஐசியில் இருந்து வெளிவந்துள்ள முதன்மைத் தகவல் என்னவென்றால், இவர் பாகிஸ்தானில் வசிக்கும் ரிஸ்வான் அஷ்ரப் (24). சில ஆடைகள், மத புத்தகங்கள், இரண்டு கத்திகள், தண்ணீர் பாட்டீல்கள், கொஞ்சம் உணவுப்பொருட்களை கைப்பற்றியுள்ளோம். முதற்கட்ட விசாரணையில் நுபுர் ஷர்மாவின் ஆட்சேபகரமான பேச்சுகள் தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க தான் இங்கு வர விரும்பியதாகக் கூறினார்” என்று ஆனந்த் சர்மா கூறினார்.
“அந்த நபருக்கு நுபுர் ஷர்மாவின் இருப்பிடம் பற்றியோ அல்லது அவர் நுபுர் ஷர்மாவை எப்படி அடைவார் என்பது பற்றி எதுவும் தெரியாது. ஆனால், அவர் மத ரீதியாக ஊக்கம் பெற்று இந்தியாவுக்கு வந்திருந்தார்.” என்று ஆனந்த் சர்மா கூறினார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வெளிநாட்டினர் சட்டம், இந்திய பாஸ்போர்ட் சட்டம் மற்றும் ஆயுதச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் பாகிஸ்தானில் ஒரு மதக் கூட்டத்தில் பங்கேற்றதாகவும், அங்கே உந்துதல் பெற்ற பின்னர், அவர் பாஜக தலைவரைக் கொல்ல திட்டமிட்டதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்களுக்கு வழிவகுத்த நபிகள் நாயகம் குறித்த நுபுர் ஷர்மாவின் கருத்து காரணமாக தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த பின்னணியில் பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”