திருப்பூர்: திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்பட்ட தன்னார்வ பயிலும் வட்டத்தில் பயின்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த மாணவர் தனது இரண்டாவது முயற்சியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைத்தின் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், உதவி ஆணையர் (வணிக வரித்துறை), துணை பதிவாளர் (கூட்டுறவுத்துறை) உள்ளிட்ட 66 காலிபணியிடங்கள் நிரப்புவதற்கான, குருப்-1 தேர்வு அறிக்கை வெளியிடப்பட்டு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடந்து முடிந்து முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.
இதில், திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் இலவச பயிற்சி வகுப்பில் பயின்ற மாணவர் செந்தில்குமார், இந்த தேர்வில் பழங்குடியினர் பிரிவுக்கான இனசுழற்சி அடிப்படையில், மாநில அளவில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்று, துணை ஆட்சியர் பணிக்கு நியமனம் செய்யப்பட உள்ளார்.
இதுகுறித்து செந்தில்குமார் இந்து தமிழ் திசை செய்தியாளரிடம் கூறும்போது, “திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை மேல்பட்டு தான் என்னுடைய கிராமமாகும். தந்தை அய்யன்பெருமாள். தாயார் சின்னமயில். பி.இ., மெக்கானிக்கல் பட்டம் படித்தேன். எங்கள் கிராமம் மலைகிராமம். கடந்த 5 ஆண்டுகளாக திருப்பூரில் தங்கியிருந்து, ஏற்றுமதி காப்பீடு நிறுவனத்தில் அரசு ஊழியராக பணியாற்றி வந்தேன். இதற்கிடையே போட்டித்தேர்வுகளில் படித்து, பங்கேற்றும் வந்தேன்.
இந்நிலையில் கடந்த ஓராண்டாக, திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படும் தன்னார்வ பயிலும் வட்ட இலவச பயிற்சி வகுப்பில் படித்து தேர்ச்சி பெற்றுள்ளேன். தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், படிப்பவர்கள் குரூப்-1 தேர்வுக்கு தயாராக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படும் தன்னார்வ பயிலும் வட்ட இலவச பயிற்சி வகுப்பில் சேரலாம்.
வாரத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகள் ஆகிய 2 நாட்களில் இந்த வகுப்பில் படித்து இன்றைக்கு நான் தேர்ச்சி பெற்றுள்ளேன். கடந்த 2015-ம் ஆண்டு முதல் படித்து வந்தேன். இந்நிலையில் ஏற்கனவே ஒருமுறை தொகுதி 1 தேர்வெழுதி, நேர்முகத் தேர்வு வரை பங்கேற்றேன். எனது 2-வது முயற்சியில் தற்போது மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளேன்” என்றார்.
இதனைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சு.வினீத், செந்தில்குமாருக்கு பாராட்டு தெரிவித்து நினைவுப் பரிசு வழங்கினார். அதேபோல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ், அலுவலக ஊழியர்கள் பலரும் அவரை பாராட்டினர்.