பிரான்சில் கொளுத்தும் வெயில் காரணமாக சமையல் எரிவாயு உருளைகள் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரான்சில் உச்சம் தொட்ட வெப்பநிலை காரணமாக காட்டுத்தீ கட்டுப்படுத்த முடியாமல் பரவி வருகிறது.
இதுவரை பாதுகாப்பு கருதி 37,000 மக்கள் வேறு பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதனிடையே, 19,000 ஹெக்டேர்களுக்கும் அதிகமான வனப்பகுதி எரிந்து சேதமடைந்துள்ளதாகவும்,
இந்த மூன்று தனித்தனி காட்டுத்தீ சம்பவங்களுக்கு எதிரான போராட்டத்தில் தோல்வியடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது இந்த காட்டுத்தீயானது நாட்டின் தென்மேற்கில் உள்ள சுற்றுலாப் பகுதிகளை நோக்கி வேகமாக முன்னேறுகிறது என அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நிலையில் Pyla-sur-Mer பகுதி ஹொட்டல் ஒன்றில், சமையல் எரிவாயு உருளைகள் வெடிக்காமல் இருக்க, நீச்சல் குளங்களில் அவையை பாதுகாக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது அப்பகுதியில் வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது. ஆனால் நீச்சல் குளத்தில் எரிவாயு உருளைகளை தள்ளி பாதுகாப்பதற்கு பதிலாக, ஏன் அவகைகளை வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று பத்திரப்படுத்தவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
முன்னதாக காட்டுத்தீ ஏற்பட்டதும் முகாம் அமைத்திருந்த சுமார் 6,000 மக்கள் அப்பகுதியில் இருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
இரண்டு வாரங்களுக்கு பின்னர் திங்களன்று ஒரே நாளில் 9,000 பேர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
1,200 தீயணைப்பு வீரர்கள் இரவு பகல் பாராமல் போராடி வந்தாலும், தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே 40 வயது மரம் ஒன்று வெப்பம் தாங்காமல் வெடித்துச் சிதறியதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர்.
சில பகுதியில் தீயின் உக்கிரம் காரணமாக தீயணைப்பு வீரர்கள் போராட்டத்தை கைவிடும் பரிதாப நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், Landiras பகுதியில் காட்டுத்தீக்கு காரணமானவர் என கூறி ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இதனிடையே, வடமேற்கு மற்றும் தென்கிழக்கில் மேலும் இரண்டு தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதாவும், ஆனால் அவை கட்டுக்குள் இருப்பதாக கருதப்படுகிறது என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
பிரான்சில் இதுவரை காட்டுத்தீ காரணமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.
ஆனால் வடக்கு ஸ்பெயினில் ஏற்பட்ட காட்டுத் தீயில் ஒரு தீயணைப்பு வீரர் மற்றும் 69 வயதான ஆட்டிடையன் ஆகியோர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.