ஓசூர்: ஓசூரில் ரூ.1 கோடி மதிப்புள்ள புத்தகங்கள் விற்பனை மற்றும் சுமார் 40 ஆயிரம் மாணவர்கள் உட்பட 3 லட்சம் பார்வையாளர்கள், 500 வாசகர்கள் கண்தானம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் மாநில அரசின் உதவியுடன் கடந்த 12 நாட்களாக நடைபெற்று வந்த 11-வது புத்தகத் திருவிழா நிறைவடைந்தது.
ஓசூர் நகரில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஓசூர் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஹில்ஸ் ஹோட்டல் அரங்கில் கடந்த 8-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை 12 நாட்களாக நடைபெற்று வந்த இந்த 11-வது புத்தகத் திருவிழா நிறைவு பெற்றது.
புத்தகத் திருவிழாவின் இறுதி நாளான இன்று புத்தக அரங்குகளை பார்வையிட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இலவச பேருந்துகளில் அழைத்துவரப்பட்டனர்.
அனைத்து மாணவர்களும் வரிசையில் சென்று புத்தகங்களை பார்வையிட்டு தங்களுக்கு பிடித்தமான புத்தகங்களை வாங்கிச் சென்றனர். மேலும் புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டிருந்த கோளரங்கத்தை நீண்ட வரிசையில் காத்திருந்து உற்சாகத்துடன் பார்வையிட்டனர். இந்த ஓசூர் புத்தகத் திருவிழாவில் 100 ஸ்டால்கள் அமைக்கப்பட்டு முன்னணி பதிப்பகங்களின் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
இந்தப் புத்தகத் திருவிழாவில் ஓசூர் மேக்னம் அரிமா சங்கம் சார்பில் கண் தான விழிப்புணர்வு முகாம் அமைக்கப்பட்டு, புத்தகங்களை பார்வையிட வருகை தந்த பொதுமக்களிடையே கண் தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து புத்தகத் திருவிழாவுக்கு வருகை தந்த பிரபல சொற்பொழிவாளர் நாஞ்சில் சம்பத், பட்டிமன்ற பேச்சாளர் கவிதா ஜவஹர் உட்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் கண் தானம் வழங்குவதாக உறுதி மொழி அளித்ததை தொடர்ந்து, அவர்களுக்கு மேக்னம் அரிமா சங்க தலைவர் அண்ணாமலை, செயலாளர் (சேவைதிட்டம்) ரவிசங்கர் ஆகியோர் கண் தான உறுதி மொழி அட்டைகளை வழங்கி பாராட்டினர்.
மேலும், இந்தப் புத்தகத் திருவிழாவில் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான இல்லம் தேடிக் கல்வி அரங்கை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகள் பார்வையிட்டு பயனடைந்தனர்.
இதுகுறித்து 11-வது புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர் முனைவர் சேதுராமன் கூறியது: “மாநில அரசின் உதவி பெற்ற முதல் புத்தகத் திருவிழா என்ற பெருமை ஓசூர் 11-வது புத்தகத் திருவிழா பெற்றுள்ளது.
இங்கு அமைக்கப்பட்டிருந்த 100 புத்தக அரங்குகளை 12 நாட்களில் சுமார் 40 ஆயிரம் மாணவர்கள் உட்பட 3 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். ரூ.1 கோடி மதிப்புள்ள புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
மேலும் ஓவியப் போட்டி, கதை எழுதும் போட்டி, சதுரங்கம் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நிறைந்த இந்த 11-வது புத்தகத் திருவிழாவுக்கு ஓசூர் மக்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது” என்று அவர் கூறினார்.