பிரித்தானிய தலைநகர் லண்டனில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இது பாரிய சம்பவம் எனவும் லண்டன் தீயணைப்புத்துறை அறிவித்துள்ளது.
லண்டனில் கட்டுப்பாட்டை மீறி பெருமளவில் பரவிய காட்டுத்தீயால் பல குடியிருப்புகள் மொத்தமாக எரிந்து சாம்பலானதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
வென்னிங்டனில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள், தீயில் இருந்து தப்பிக்க குடியிருப்பாளர்கள் ஓடுவதைக் காண முடிந்தது.
குறித்த பகுதியில் நூறுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களை களமிறக்கியுள்ளதாக நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காற்று பலமாக வீசியதால், தீயை கட்டுப்படுத்த முடியாமல் போனதாகவும், இதனால் சில நிமிடங்களில் பல வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.
இதற்கிடையில், டார்ட்ஃபோர்டில் A2 சாலை அருகாமையில் காட்டுத்தீ மள மளவென பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை எவரும் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் அப்பகுதி கடும் புகைமூட்டமாக காணப்படுவதாக சாரதிகள் தெரிவித்துள்ளனர்.
நகரம் முழுவதும் பல பகுதிகளில் மக்கள் ஆம்புலன்ஸ் சேவையின் உதவியை நாடியுள்ளதாக லண்டன் ஆம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது.
இதனிடையே, இன்று பிற்பகலில், இங்கிலாந்தில் முதன்முறையாக வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியது.
ஹீத்ரோவில் மதியம் 12.50 மணியளவில் 40.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது.
பிரித்தானியாவின் முந்தைய உச்ச வெப்பநிலையானது 2019ல் கேம்பிரிட்ஜில் 38.7° செல்சியஸ் என பதிவாகியிருந்தது.