சின்னசேலம்: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்தது தொடர்பாக சின்னசேலம் தனியார் பள்ளியில் சிபிசிஐடி எஸ்.பி ஜியாவுல் ஹக் தலைமையிலான விசாரணைக் குழுவினர் விசாரணையை தொடங்கினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேநிலைப் பள்ளியில் நிகழந்த வன்முறை சம்பவங்களைத் தொடர்ந்து, உள்துறை செயலாளர் பணீந்தரரெட்டி மற்றும் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் சம்பவ இடத்தை கடந்த 17-ம் தேதி பார்வையிட்டு, அதன் பின் மாணவி உயிரிழப்பு மற்றும் வன்முறை சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி பிரிவு விசாரிக்கும் எனத் தெரிவித்தார்.
அதையொட்டி சிபிசிஐடி எஸ்பி ஜியாவுல்ஹக் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அக்குழுவினர் இன்று, மாணவி தங்கியிருந்த விடுதி பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். மாணவி விழுந்ததாக கூறப்படும் இடங்களையும் கூர்ந்து ஆய்வு செய்தனர்.
அப்போது மாணவி உருவ பொம்மை ஒன்று தயாரித்து, 2 மற்றும் 3-வது தளத்திலிருந்தும், கட்டிடத்தின் மேல் தளத்திலிருந்து 3 முறை கீழே போட்டு மாணவி உயிரிழந்ததாகக் கூறப்படும் இடத்தின் தன்மை, விழுந்த இடத்தின் தூரம் உள்ளிட்டவைகளை பதிவு செய்து கொண்டனர்.
பின்னர் மாணவி தங்கி இருந்த விடுதியின் அறை மற்றும் அவர் பயன்படுத்திய பகுதி உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்தனர். நண்பகல் 12 மணிக்கு வந்த சிபிசிஐடி குழுவினர் சுமார் 3 மணி நேரம் பள்ளி வளாகத்தில் இருந்து ஆய்வு பணியை செய்தனர்.
மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை நடத்தப்படும் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்கள் குழுவினருடன் ஆலோசனை நடத்தினர்.