இலங்கையில் பணியமர்த்தப்பட்ட இந்திய அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கொழும்பில் தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார் என இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இலங்கையில் இருக்கும் இந்திய பிரஜைகள் இலங்கையின் சமீபத்திய நிலைகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும், அதற்கேற்ப அவர்களின் இயக்கங்கள் மற்றும் செயல்பாடுகளைத் திட்டமிடுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் காரணமாக பொது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
இந்திய இலங்கை மக்களிடையிலான உறவு அன்பும் நட்பும் நிறைந்தது. இலங்கையிலுள்ள இந்திய பிரஜைகள் அண்மைய நிலைமை குறித்து எச்சரிக்கையுடன் இருக்கவேண்டியுள்ள அதேவேளை தமது நகர்வுகள் மற்றும் நடவடிக்கைகளை திட்டமிடுமாறும் கோரப்படுகினறனர். தேவைப்படும் சந்தர்ப்பங்களில் எம்மை தொடர்புகொள்ளமுடியும்.
— India in Sri Lanka (@IndiainSL) July 19, 2022
அவசரநிலையை பிரகடனம் செய்த பதில் ஜனாதிபதி
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான முக்கிய தேர்தலுக்கு முன்னதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திங்கட்கிழமை அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளார்.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளதாவது,
“இந்திய இலங்கை மக்களிடையிலான உறவு அன்பும் நட்பும் நிறைந்தது. இலங்கையிலுள்ள இந்திய பிரஜைகள் அண்மைய நிலைமை குறித்து எச்சரிக்கையுடன் இருக்கவேண்டியுள்ள அதேவேளை தமது நகர்வுகள் மற்றும் நடவடிக்கைகளை திட்டமிடுமாறும் கோரப்படுகினறனர்.
தேவைப்படும் சந்தர்ப்பங்களில் எம்மை தொடர்புகொள்ளமுடியும் என தெரிவித்துள்ளது.
இந்திய விசா நிலைய பணிப்பாளர் மீது தாக்குதல்
இதேவேளை, கொழும்பிற்கு அருகில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இந்தியபிரஜையும் இந்திய விசா நிலைய பணிப்பாளருமான விவேக் வர்மா படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிற்கு அருகில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த இந்தியபிரஜையும் இந்திய விசா நிலைய பணிப்பாளருமான திரு.விவேக் வர்மா அவர்களை இந்திய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் இன்று காலை சந்தித்தனர்.இச்சம்பவம் குறித்து இலங்கை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
— India in Sri Lanka (@IndiainSL) July 19, 2022
இந்த விடயம் இலங்கை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்த பிறகு, இந்தியர் ஒருவர் தாக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இலங்கையின் பொருளாதார மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், ஜனநாயக வழிமுறைகள் மற்றும் விழுமியங்கள் மற்றும் நிறுவப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பின் மூலம் செழிப்பு மற்றும் முன்னேற்றத்திற்கான அவர்களின் அபிலாஷைகளை நனவாக்க முயலும் இலங்கை மக்களுடன் தாம் தொடர்ந்து நிற்கும் என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாலைதீவுக்கும் பின்னர் சிங்கப்பூருக்கும் தப்பிச் சென்றதையடுத்து பதில் ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க அவசரநிலையை நடைமுறைபடுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.