வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: சிவசேனா அதிருப்தி குழுவைச் சேர்ந்த 12 எம்.பி.க்கள் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவை சந்தித்து கட்சியின் லோக்சபா தலைவரை மாற்ற வலியுறுத்தினர்.
மஹாராஷ்டிராவில் சிவசேனா கட்சியில் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தியாளர்கள் தனியாகப் பிரிந்தனர். மொத்தமுள்ள 55 எம்.எல்.ஏ.க்களில் 40 பேர் ஆதரவுடன் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி குழு பா.ஜ.வுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது.
இந்நிலையில் கட்சியின் 19 லோக்சபா எம்.பி.க்களில் 12 எம்.பி.க்கள் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தங்களை தனிக் குழுவாக அங்கீகரிக்கும்படி இவர்கள் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடிதம் அனுப்ப திட்டமிட்டிருந்தனர்.இந்நிலையில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவின் சார்பில் கட்சியின் லோக்சபா தலைவர் வினாயக் ராவத் சபாநாயகருக்கு நேற்று முன்தினம் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
அதில் அதிருப்தியாளர்கள் குழுவின் எந்தக் கோரிக்கையையும் ஏற்கக் கூடாது என அவர் வலியுறுத்தினார்.கட்சியின் பார்லிமென்ட் குழு தலைவர் தான்தான் என்றும் தலைமை கொறடா ரஞ்சன் விசாரே என்றும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.இந்நிலையில் 12 அதிருப்தி எம்.பி.க்கள் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவை புதுடில்லியில் நேற்று சந்தித்தனர்.
முதல்வர் ஷிண்டேயின் மகனும் லோக்சபா எம்.பி.யுமான ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையில் அவர்கள் சென்றனர்.அப்போது கட்சியின் புதிய லோக்சபா தலைவராக ராகுல் ஷெவாலேயை நியமிக்கும்படி அவர்கள் சபாநாயகரை கேட்டுக் கொண்டுள்ளனர்.இதற்கிடையே மஹாராஷ்டிராவின் பல்வேறு இடங்களில் உள்ள சிவசேனா அதிருப்தி குழுவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள எம்.பி.க்களின் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement