தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா மீது இறுதி முடிவு எப்போது எடுக்கப்படும்?: நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் பதில்

புதுடெல்லி: தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா குறித்து ஒன்றிய அரசின் நிலைப்பாடு என்ன என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு மக்களவையில் உள்துறை இணை அமைச்சர் விளக்கமளித்துள்ளார். ‘நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க கோரி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதோ ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதா? அப்படியெனில் எப்போது அனுப்பப்பட்டது?. அதன் மீதான ஒன்றிய அரசு நிலைப்பாடு என்ன?’ என்று மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா அளித்துள்ள பதிலில், ‘கடந்த 2.5.2022 அன்று தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா ஒன்றிய அரசுக்கு கிடைக்கப்பெற்றது. இதனை தொடர்ந்து துறை சார்ந்த அமைச்சர்களுடன் அவை பகிர்ந்து கொள்ளப்பட்டு ஆலோசனை நடத்தப்பட்டதில் கூடுதல் ஆவணங்கள் தொடர்பாக கடந்த ஜூன் மாதம் 21 மற்றும் 27 ஆகிய தேதிகளில் ஒன்றிய சுகாதாரம் மற்றும் ஆயுஷ் அமைச்சகம் ஆகிய இரண்டு தரப்பிலும் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டுக்கும் தமிழக அரசிடம் இருந்து பதில் கிடைத்தவுடன் இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும். இதில் இறுதி முடிவு எடுக்க எவ்வளவு அவகாசம் எடுத்துக்கொள்ளப்படும் என்பதை கூற வாய்ப்பில்லை’ என தெரிவித்தார்.* பசுமை வழி விமான நிலையம் தொடர்பாக, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி சோமு எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே சிங் அளித்துள்ள பதிலில், ‘கோவா உட்பட நாடு முழுவதும் 21 இடங்களில் பசுமை வழி விமான நிலையங்கள் அமைப்பதற்கு கொள்கை ரீதியில் ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் பசுமை வழி விமான நிலையத்தை அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு நான்கு இடங்களை தேர்வு செய்து அனுப்பியது. இதில், இரண்டு இடங்களில் பசுமை வழி விமான நிலையங்களை அமைப்பதற்கு சாத்தியமான சூழல் இருப்பதாக கண்டறியப்பட்டது’ என தெரிவித்துள்ளார்.* கழிவுநீர் தொட்டி மரணங்கள் தொடர்பாக மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு ஒன்றிய சமூக நீதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிலில், ‘நடப்பாண்டை பொருத்தமட்டில் அதிகபட்சமாக தமிழகத்தில் தான் இத்தகைய மரணங்கள் நிகழ்ந்து இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது. உள்ளது. இத்தகைய மரணங்களை தடுப்பதற்காக ஏற்கனவே உரிய விதிமுறைகள் வகுக்கப்பட்டு இருக்கிறது. 5 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட உள்ளாட்சி அமைப்புகளில் இயந்திரத்திளான கருவிகளை பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. .* தென் சென்னை திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் விதி எண் 377 இன் கீழ், ‘வாடகைத் தாய்க்கு ஹீட்டோ-செக்சுவல் தம்பதிகள் மட்டுமே அனுமதிக்கப் படுகிறார்கள். இந்த சட்டத்தின் கீழ் குழந்தை பெற்றுக்கொள்ளும் உரிமையை மேற்கண்ட சமூகத்தினர் மற்றும் தனிநபர்கள் அல்லது தம்பதிகளுக்கும் கொடுக்க வேண்டும். கருக்கலைப்புக்கான அணுகல் தேவைப்படக்கூடிய திருநங்கைகள் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்களை உள்ளடக்குவதற்கு பெண்கள் என்ற வரையறையை உடனடியாக விரிவுபடுத்த வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளார். * மக்களவையில் திமுக எம்பி கதிர் ஆனந்த் விதி எண் 377 கீழ் ஒன்றிய அரசுக்கு சில கோரிக்கைகளை முன்வைத்தார்.  அதில், ‘70சதவீத ரயில்களை அதிகக் கட்டணத்துடன் சிறப்பு ரயில்களாக அரசு இயக்குகிறது. ரயில் சேவையை தனியாரிடம் ஒப்படைப்பதால், கட்டணங்கள் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.‌ எனவே, ரயில் சேவைகளை 100 சதவீதம் மீட்டெடுக்கவும், சிறப்பு ரயில்களில் கட்டணத்தை குறைக்கவும், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான ரயில் கட்டணச் சலுகைகளை வழங்கவும் ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.* மாநிலங்களவையில் திமுக எம்பி ராஜேஷ்குமார் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஆயுஷ் ஒன்றிய அமைச்சர் சர்பனந்தா சோனாவால், ‘ஆயுஷ் மருந்துகளை பயன்படுத்தி கொரோனா போன்ற தொற்று நோய்களை தடுக்க அமைச்சகத்தின் தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரப்படுகிறது. இருப்பினும் அலோபதி, ஹோமியோபதி அல்லது கொரோனாவுக்கு  எதிராக தற்போது அளிக்கப்படும் தடுப்பூசிகளுக்கு மாற்றாக பயன்படுத்தக் கூடிய மருந்துகள் எதுவும் ஆயுஷ் அமைச்சகத்தால் உருவாக்கப்படவில்லை’ என்று கூறினார். *தேசிய கிராமப்புற குடிநீர் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் எத்தனை வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்ற திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் எழுப்பிய கேள்விக்கு, ஜல்சக்தி துறை அமைச்சர் பிரஹலாத் சிங் பாட்டீல் அளித்த பதிலில், ‘கடந்த 2019-20 நிதி ஆண்டில் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு இத்திட்டத்திற்காக ரூ373.87 கோடியை ஒதுக்கி உள்ளது. இதில், தமிழக அரசு ரூ373.10 கோடியை செலவிட்டுள்ளது. 2020-2021 நிதியாண்டில் ஒன்றிய அரசு ரூ921.99 கோடி ஒதுக்கியுள்ளது. அதில், ரூ690.36 கோடியை தமிழக அரசு செலவிட்டுள்ளது. கடந்த 2021-22 நிதி ஆண்டில் ஒன்றிய அரசு ஒதுக்கிய நிதி ரூ3,091.21 கோடி. இதில் மாநில அரசு செலவிட்ட நிதி ரூ614.35 கோடியாகும்’ என்று கூறினார்.* திமுக மக்களவை உறுப்பினர் எஸ்.ஆர் பார்த்திபன் ஒன்றிய ரயில்வே வாரியத் தலைவர் திரிபாதியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். அதில், ‘சேலம் – விருத்தாசலம் – சேலம் பயணிகள் ரயில் சேவைகளை கடலூர் துறைமுக சந்திப்பு வரை நீட்டிக்க வேண்டும். சேலம் – வேளாங்கண்ணி பகல் நேர தினசரி புதிய விரைவு ரயில், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் வரையில் சேவை வழங்கிட வேண்டும். சேலத்திலிருந்து தாம்பரத்திற்கு (விழுப்புரம், கடலூர், விருத்தாசலம் வழியாக) புதிய பகல் நேர இன்டர்சிட்டி விரைவு ரயில் சேவை இயக்க வேண்டும்’ என்று தெரிவித்தார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.