மைசூரு தசரா விழா கோலாகலமாக கொண்டாட முடிவு| Dinamalar

பெங்களூரு : ”சர்வதேச அளவில் பிரபலப்படுத்தும் வகையில், இம்முறை மைசூரு தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்படும். சென்னை விமான நிலையத்திலும் பிரசாரம் செய்யப்படும்,” என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா, கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது. இவ்விழா, கர்நாடக அரசு ஆண்டுதோறும் கொண்டாடும் மிக பெரிய விழாவாகும்.

ஆலோசனை
இம்முறை தசரா விழா கொண்டாடுவது தொடர்பாக, பெங்களூரு விதான் சவுதாவில், முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.கூட்டத்தில், கூட்டுறவு துறை அமைச்சர் சோமசேகர், மாநில தலைமை செயலர் வந்திதா ஷர்மா, மைசூரு மாவட்ட மக்கள் பிரதிநிதிகள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடந்தது.பின், பசவராஜ் பொம்மை கூறியதாவது:கொரோனாவால் இரண்டு ஆண்டுகளாக பாரம்பரிய முறைப்படி, எளிமையாக தசரா விழா கொண்டாடப்பட்டது. இம்முறை கோலாகலமாக கொண்டாடலாம் என்று அனைவர் கருத்தையும் அரசு ஏற்கிறது.

சர்வதேச ‘பிராண்ட்’
மைசூரு தசரா விழா சர்வதேச அளவில், ‘பிராண்ட்’ ஆக உருவாக்கப்படும். இதற்காக, விளம்பரம், இணையதளம், சமூக வலைதளங்களில் தசரா விழா சின்னம் பிரபலப்படுத்தப்படும். சென்னை, மும்பை, டில்லி ஆகிய விமான நிலையங்களில் விழா குறித்து பிரசாரம் செய்யப்படும்.சுற்றுலா துறையுடன் இணைந்து, சிறப்பு சுற்றுலா திட்டம் ஒரு வாரத்திற்குள் அறிவிக்கப்படும். பேலுார், ஹலேபீடு போன்ற சுற்றுலா தலங்களுக்கும் ஒரே டிக்கெட்டில் பயணித்து, தங்கும் வசதி, உணவு ஆகியவை கிடைக்கும். தனி இணையதளமும் உருவாக்கப்படுகிறது.பாரம்பரிய முறைப்படி அனைத்து நடைமுறையும் தவறாமல் கடைப்பிடிக்கப்படும். இதன் மூலம், கிராமிய மக்கள் ஈடுபட வாய்ப்பு தரப்படும்.

கண்காட்சி
இம்முறை தசரா விழா ஆரம்பிப்பதற்கு, 15 நாட்களுக்கு முன்னதாகவே பொருட் கண்காட்சி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கப்பட்டணா, சாம்ராஜ் நகர் தசரா விழாவிற்கு தலா 1 கோடி ரூபாய் வழங்கப்படும். மைசூரு தசரா விழாவை பொறுத்தவரை, அரண்மனை வளாகத்திற்குள் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு, அரண்மனை ஆணையம் நிதியை வழங்கும்.வெளிப்புற நிகழ்ச்சிகளுக்கு, மைசூரு வளர்ச்சி ஆணையம் 10 கோடி ரூபாய் வழங்கும். மீதி நிதியை அரசே ஏற்கும். கலை நிகழ்ச்சிகளில், உள்ளூர் கலைஞர்களுக்கு வாய்ப்பு தருவதுடன்; தேசிய அளவில் பிரசித்தி பெற்ற கலைஞர்களுக்கும் வாய்ப்பு தரப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.