பெங்களூரு : ”நான் என்ன சன்னியாசியா. காவி ஆடை அணிந்துள்ளேனா. கதர் ஆடை அணிந்துள்ளேன். முதலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும். முதல்வர் யார் என்பதை, கட்சி மேலிடம் தீர்மானிக்கும்,” என மாநில காங்., தலைவர் சிவகுமார் தெரிவித்தார்.கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் சித்தராமையா. இவர், 2013 – 2018 வரை காங்., ஆட்சியில் ஐந்தாண்டுகள் முதல்வராக பதவி வகித்தார். மீண்டும் முதல்வர் பதவி மீது கண் வைத்துள்ள அவர், அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க, வியூகம் வகுத்துள்ளார்.
இதற்காக, ஆகஸ்ட் 12ம் தேதி, தன் 75வது பிறந்த நாள் விழாவை சிறப்பான முறையில் கொண்டாட உள்ளார். ஒரு மாதம் முழுதும், ‘சித்தராமோற்சவம்’ என்ற பெயரில் கொண்டாடுவதற்கு தனி தனி குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.இதற்கிடையில், அவரது திட்டத்தை முறியடிக்கும் வகையில், மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார், அவரது சகோதரர் சுரேஷ் ஆகியோர் தனி திட்டம் வகுத்துள்ளனர். சித்தராமோற்சவத்துக்கு இருவரும் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்து, ‘தனி நபர் ஆராதனை வேண்டாம், கட்சியை ஆராதனை செய்யுங்கள்’ என கேட்டுக் கொண்டுள்ளனர்.இது குறித்து, சென்னபட்டணாவில் கடந்த ௧௭ம் தேதி ஒக்கலிகர் சங்க விழாவில் சிவகுமார் பேசுகையில், ”எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு பின், நம் சமுதாயத்திற்கு வந்துள்ள வாய்ப்பை விடக் கூடாது. உங்களுக்காக நான் இருக்கிறேன். ஆட்சி அமைக்கும் போது, என் கையை பலப்படுத்துங்கள்,” என, மறைமுகமாக முதல்வர் பதவி மீதான ஆசையை வெளிப்படுத்தினார்.
இதையடுத்து, நேற்று மைசூரு பிரஸ் கிளப்பில் சிவகுமார் கூறியதாவது:காங்கிரசில், சித்தராமையா கோஷ்டி, சிவகுமார் கோஷ்டி என்பதெல்லாம் கிடையாது. காங்கிரஸ் கோஷ்டி மட்டுமே உள்ளது. என் கைகளை பலப்படுத்தும்படி கேட்டதில் என்ன தவறு.நான் என்ன சன்னியாசியா. காவி ஆடை அணிந்துள்ளேனா. கதர் ஆடை அணிந்துள்ளேன். முதலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும். முதல்வர் யார் என்பதை, கட்சி மேலிடம் தீர்மானிக்கும்.ராகுலும், நானும் சித்தராமோற்சவத்தில் பங்கேற்கிறோம். சித்தராமையாவின் 75வது பிறந்த நாள் விழாவை, அவரது ஆதரவாளர்கள் விமரிசையாக கொண்டாட உள்ளனர். இதில் என்ன தவறு உள்ளது. நான் எளிமையாக கொண்டாடினேன். சிலர் விமரிசையாக கொண்டாடுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement