புதுடெல்லி: ‘காவிரி ஆணையத்தின் கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதித்தால் தமிழக அதிகாரிகள் வெளிநடப்பு செய்வார்கள்’ என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லியில் தெரிவித்துள்ளார்.காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் மேகதாது குறித்து விவாதிக்கப்படுவதற்கு எதிராக தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவானது இன்று நீதிபதி கன்வீல்கர் அமர்வில் விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையே, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16வது கூட்டம் நாளை மறுநாள் நடக்க உள்ளது. இந்த நிலையில் 2 நாள் பயணமாக டெல்லி வந்துள்ள தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று காவிரி, மேகதாது ஆகியவை தொடர்பாக மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, தமிழக வழக்கறிஞர்கள் குமணன், உமாபதி மற்றும் காவிரி ஆணையத்தின் தொழில்நுட்ப தலைவர் ஆகியோருடன் தமிழ்நாடு இல்லத்தில் ஆலோசனைகள் மேற்கொண்டார்.பின்னர் அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், ‘‘காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்கக் கூடாது என நாளை (இன்று) டெல்லியில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்து முறையிட இருக்கிறோம். உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணையின் முடிவை பொறுத்து அடுத்த கட்ட நகர்வு குறித்து ஆலோசிக்கப்படும். ஒன்றிய அமைச்சரை சந்தித்து முறையிட்டதற்கு பிறகும் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டால் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வெளிநடப்பு செய்வார்கள்’’ என்றார்.