கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில், தனியார் பள்ளி மாணவியின் உடல் மறு கூராய்வு செய்யப்பட்டது. 3 மணி நேரத்திற்கும் மேலாக உடற்கூராய்வு நடந்த நிலையில், மாணவியின் உடல் மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளது.
சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக்கூறி கலவரம் வெடித்தது. மாணவியின் பெற்றோர் கோரியதன் அடிப்படையில் மறு கூராய்வு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மாணவியின் பெற்றோர் தரப்பினரையும் மறு கூராய்வில் அனுமதிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவுபடி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மறு உடற்கூராய்வு நடைபெற்றது. திருச்சி மருத்துவர் ஜூலியானா ஜெயந்தி, விழுப்புரம் மருத்துவர் கீதாஞ்சலி, சேலம் மருத்துவர் கோகுல ரமணன், தடயவியல் துறை நிபுணர் சாந்தகுமார் ஆகியோர் மறு உடற்கூராய்வில் பங்கேற்றனர். மேலும், மாணவியின் உடலை ஏற்கெனவே உடற்கூராய்வு செய்த கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை மருத்துவர் செந்தில் குமாரும் இந்த குழுவில் இடம்பெற்றிருந்தார்.
இதைத்தொடர்ந்து மறு உடற்கூராய்வு செய்யப்பட்ட நிலையில், அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மறுகூராய்வுக்கு மாணவியின் பெற்றோர் தரப்பில் யாரும் வரவில்லை. முன்னதாக மறுகூராய்வு குறித்து மாணவியின் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதையடுத்து 3 மணி நேரத்திற்கும் மேலாக மாணவியின் சடலம் மறு உடற்கூராய்வு நடந்த நிலையில், மாணவியின் உடல் மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளது.
உடற்கூராய்வில் மாணவியின் பெற்றோர் பங்கேற்காதநிலையில், இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலுள்ள மாணவியின் உடலை பெற்றுக் கொள்ளுமாறு பெற்றோரை கேட்டுக்கொள்வதாக அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM