புதுடெல்லி: ராணுவத்துக்கான ஆள்சேர்ப்பு விண்ணப்பத்தில் ஜாதி சான்றிதழ், தேவைப்பட்டால் மதச்சான்றிதழ் சமர்ப்பிக்கும் முறை எப்போதும் உள்ளது, இது அக்னி பாதை திட்டத்துக்கு மட்டும் கேட்கப்படவில்லை என இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், “இந்திய வரலாற்றில் முதல்முறையாக, ராணுவ வீரர்களுக்கான தேர்வில் ஜாதி விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன.
தலித்துகள், பிற்படுத்தபட்ட வகுப்பினர், பழங்குடியினர் ஆகியோரை ராணுவத்துக்கு தகுதியானவர்களாக பிரதமர் மோடி கருதவில்லையா? அக்னி வீரர்களை உருவாக்க விரும்புகிறீர்களா அல்லது ஜாதி வீரர்களை உருவாக்க விரும்புகிறீர்களா மோடி அவர்களே” என கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதேபோல் இந்த விவகாரத்தை ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் உட்பட எதிர்கட்சி தலைவர்கள் பலரும் எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து ராணுவம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது: ராணுவத்தில் சேர விரும்புவர்கள் ஜாதி சான்றிதழை சமர்பிப்பது தேவைப்பட்டால் மத சான்றிதழை சமர்ப்பிக்கும் முறை எப்போதும் உள்ளது. அக்னி பாதை வீரர்கள் தேர்வுக்காக விண்ணப்பத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பயிற்சியின்போதோ, போர் நடைபெறும்போதோ ராணுவ வீரர்கள் உயிரிழக்க நேரிட்டால், அவர்கள் மத வழக்கப்படி இறுதிச் சடங்குகள் செய்வதற்கு மதச் சான்றிதழ் தேவைப்படும். இந்த முறை எப்போதும் உள்ளது. இவ்வாறு இந்திய ராணுவம் கூறியுள்ளது.
குற்றச்சாட்டுகளை மறுத்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்விட்டரில் விடுத்துள்ள பதிவில், “இத்தகவல் வதந்தி. சுதந்திரத்துக்கு முன்பு இருந்தே ராணுவ ஆள்தேர்வில் இருக்கும் முறை தொடர்ந்து பின்பற்றப்படுகிறது. அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பழைய முறை தொடர்கிறது” என கூறினார். அக்னிப்பாதை திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தையும், டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் நேற்று மாற்றியது.