சென்னை: தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திமுக அரசு, தான் கொடுத்த வாக்குறுதிகளுக்கு மாறாக செயல்பட்டு வருகிறது. முதலில் சொத்து வரி உயர்வு, இப்போது மின் கட்டண உயர்வு. மத்திய அரசு, மாநில மின் பகிர்மான மையங்களில் சீர்திருத்தங்களைக் கொண்டு வர ரூ.3.03 லட்சம் கோடி செலவிடவுள்ளது. தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனத்துக்கு ரூ.35,981 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் மானியம் கிடைக்காது அமைச்சர் செந்தில்பாலாஜி கூறுகிறார். மின் கட்டணத்தை உயர்த்தினால்தான் மானியம் கொடுக்கப்படும் என்று எந்த நிபந்தனையும் இல்லை.
இந்த மின் கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெறாவிட்டால் பாஜக தொண்டர்கள், வரும் 23-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் போராட்டத்தை நடத்துவார்கள்.