புதுடெல்லி: நேற்று ஒரே நாளில் கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் இரண்டு விமானங்கள் இன்ஜின் கோளாறு காரணமாக பாதி வழியில் தரையிறக்கப்பட்டன.
நேற்று மும்பையிலிருந்து லேவுக்கு புறப்பட்ட கோ ஃபர்ஸ்ட் விமானத்தின் இரண்டாவது இன்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் டெல்லியில் தரையிறக்கப்பட்டது. அதேபோல், நேற்று ஸ்ரீநகரிலிருந்து டெல்லிக்கு புறப்பட்ட மற்றொரு கோ ஃபர்ஸ்ட் விமானத்தின் இரண்டாவது இன்ஜினிலும் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் மீண்டும் ஸ்ரீநகருக்கே திருப்பப்பட்டு தரையிறக்கப்பட்டது. இந்நிகழ்வு தொடர்பாக விசாரணை நடத்திவருவதாக இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு ஷார்ஜாவிலிருந்து ஹைதராபாத்தை நோக்கி வந்த இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதையடுத்து அவ்விமானம் பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்டது. ஜூலை 14 அன்று டெல்லியிலிருந்து வதோதரா சென்ற இண்டிகோ விமானத்தில் இன்ஜினில் அதிர்வுகள் உணரப்பட்டதையடுத்து அந்த விமானம் ஜெய்ப்பூரில் தரையிறக்கப்பட்டது. இம்மாதத் தொடக்கத்தில் டெல்லியிலிருந்து துபாய்க்குப் பறந்த ஸ்பைஸ் ஜெட் விமானம் பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்டது.