திருப்பூரில் இந்து முன்னணிப் பிரமுகருக்கு பாதுகாப்பு வழங்கும் போலீசாரை வெளியில் நிறுத்தி கதவை பூட்டியதாக வீடியோ வெளியான நிலையில், வாட்ஸ் அப்பில் பரப்பப்பட்ட போலியான போராட்டத் தகவலை நம்பி கடலூர் போலீசார் கொளுத்தும் வெயிலில் சில்வர் பீச்சில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
திருப்பூரில் இந்துமுன்னணிப் பிரமுகர் காடேஸ்வர சுப்பிரமணியின் பாதுகாப்புக்காக அவரது வீட்டிற்கு சென்ற காவலர்களை அவரது வீட்டு பணிப்பெண் தெருவில் நிறுத்தி கதவை மூடியதோடு, பாதுகாப்பு அளிக்க சென்ற போலீசாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
அங்கு வந்த காடேஸ்வர சுப்பிரமணியின் மனைவி, அந்த பணிப்பெண்ணை அப்படியெல்லாம் பேசக்கூடாது என்று அங்கிருந்து அனுப்பி வைத்தார்.
அதே போல சென்னை மெரீனாவில் இளைஞர்கள் போரட்டம் நடத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் கொளுத்தும் வெயிலில் ஏராளமான போலீசார், கடற்கரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அங்கு அப்படி யாரும் போராட்டத்துக்கு வரவில்லை.
அதே போல கடலூர் சில்வர் பீச்சுக்கு சிலர் போராட வருவதாக வாட்ஸ் அப்பில் சிலர் தகவல் பரப்பிய நிலையில் பெண் காவலர் ஆய்வாளர் ஒருவர் தலைமையில் அங்கு அதிரடியாக போலீசார் குவிக்கப்பட்டனர்
அங்குள்ள அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சில்வர் பீச்சுக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக கல்லூரிக்கு முன்பு போலீசாரை நிற்கவைத்தபோது, காவல் ஆய்வாளரையும் நிற்க சொன்ன போது அவர் வடிவேலு பாணியில் காமெடி டயலாக்கை சொன்னபடியே போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.
அதே போல வாகன சோதனை பணிக்காக நிழலில் அமர்ந்திருந்த சில சீனியர் போலீசார் கேமராவை பார்த்ததும் படக்கென்று எழுந்து , அந்தவழியாக வந்த இரு முதியவர்களை பார்த்து போகும் படி அறிவுறுத்தினர்
அந்தவாகனத்தை சோதனை செய்வது என்று குழம்பிய இரு போலீசாரும், அந்தவழியாக சவாரி சென்ற ஆட்டோவை மறித்து சோதனை செய்வது போல பேசி அனுப்பி வைத்தனர்
பாதுகாப்பு பணிக்காக அனுப்பி வைக்கப்படும் போலீசார், கடும் வெயிலில் அவதியுறுவதால், நிழல் தேடிசெல்வதாகவும், சில அரசியல் பிரமுகர்கள் பாதுகாப்புக்கு செல்லும் போலீசார் வீட்டுக்கு வெளியே நிறுத்தப்படுவதால் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு கூட செல்ல இயலாத நிலைக்கு தள்ளப்படுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.