தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் கொள்முதலை செப்டம்பர் 1-ஆம் தேதியே தொடங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் வழக்கமாக குறுவை, சம்பா, தாளடி என முப்போகமும் நெல் சாகுபடி செய்யப்படுகிறது . குறுவை நெல் அறுவடை செய்தால் அதை வழக்கமாக அக்டோபர் 1ஆம் தேதி முதல் தான் புதிய விலைக்கு கொள்முதல் செய்யப்படுவது வழக்கம்.
ஆனால், நிகழாண்டு மேட்டூர் அணையிலிருந்து முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் சாகுபடி பணியை முன்கூட்டியே விவசாயிகள் தொடங்கியுள்ளதால் கொள்முதலையும் முன்கூட்டியே செப்டம்பர் 1ஆம் தேதி திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இது தொடர்பாக தமிழக முதல்வரும், பிரதமர் மோடிக்கு கடிதம் வாயிலாக செப்டம்பர் 1-ஆம் தேதி கொள்முதல் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இதற்கு தற்போது மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி வெளியிட்ட செய்திக் குறிப்பு: “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு வரலாற்றில் என்றுமில்லாத அளவிற்கு மே மாதம் 24 ஆம் நாளன்றே மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட ஆணையிட்டார்.
தண்ணீர் திறந்துவிட்டதோடு நில்லாமல் குறுவை நெல் சாகுபடியும் அறுவடையும் முன்பாகவே தொடங்கிவிடும் என்பதால் 2022 – 23 ஆம் ஆண்டு காரிஃப் சந்தைப் பருவக் கொள்முதலை 1.10.2022 அன்று தொடங்குவதற்குப் பதிலாக 1.9.2022 அன்றே ஆரம்பித்திடவும் அப்படிக் கொள்முதல் செய்யும் நெல்லுக்கு 2022 – 23 ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை வழங்கிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து இந்தியப் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் 21.06.2022 அன்று கடிதம் எழுதினார்கள்.
மேலும், முதல்வர் ஸ்டாலின் ஆணைக்கினங்க, மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் திட்டம் மற்றும் துணிநூல் துறை அமைச்சர் பியுஸ் கோயலை நானும் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலாளரும் கோயம்புத்துரில் 25.06.2022 அன்று நேரில் சந்தித்து முதல்வர், பிரதமருக்கு எழுதிய கடித நகலைக் கொடுத்து 1.09.2022 அன்று நெல் கொள்முதலைத் தொடங்க அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
புதுடெல்லியில் 5.07.2022 நடந்த மாநில உணவு அமைச்சர்கள் மாநாட்டின் போதும் மத்திய அமைச்சரிடம் இது பற்றி நானும், துறையின் முதன்மைச் செயலரும் நினைவூட்டினோம்.மேலும், குறுவைப் பருவ நெல் கொள்முதல் தொடர்பாக காவிரிப்பாசன மாவட்ட விவசாயிகளின் ஆலோசனைகளைக் கேட்டிடவும் நெல் கொள்முதலுக்கான ஆயத்தப்பணிகளை உடனே மேற்கொண்டிடவும் முதல்வர் ஆணையிட்டார்.
அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 12.07.2022 மற்றும் 13.07.2022 ஆகிய இரு நாள்களில் மக்கள் பிரதிநிதிகளையும் விவசாயிகள் பிரதிநிதிகளையும் சந்தித்து ஆலோசித்ததோடு தொடர்புடைய அலுவலர்களின் ஆய்வுக் கூட்டங்களையும் நடத்தினோம்.
நெல் கொள்முதலுக்குத் தேவையான பணியாளர்கள் தேர்வு, கொள்முதல் நிலையங்கள் மற்றும் நெல் அதனடிப்படையில் சேமிப்புக்கான இடங்கள், கொள்முதலுக்குத் தேவையான சாக்குகள் மற்றும் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டன.
2022-23 ஆம் ஆண்டு கொள்முதல் பருவத்தை ஒரு மாதம் முன்னதாக 1.09.2022 அன்றே தொடங்கி நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கிய மத்திய அரசின் கடிதம் (19.07.2022 அன்று கிடைக்கப் பெற்றது. இதனால் 1.09.2022 அன்றிலிருந்தே நெல் கொள்முதல் செய்வதற்கான பணிகளைத் தொடங்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
1.09.2022 அன்றே 2022 – 23 ஆம் ஆண்டு பருவ நெல் கொள்முதலைத் தொடங்க பிரதமருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சருக்கும் அனுமதி வழங்கிய பிரதமருக்கும் மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் திட்டம் மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன்படி, கொள்முதல் செய்யப்படும் பொது ரகத்துக்கு 2,115 ரூபாயும், சன்ன ரகத்திற்கு 2,160 ரூபாயும் விவசாயிகளுக்கு கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியும் மத்திய மாநில அரசுகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.