நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான இரண்டாவது தன்னார்வத் தேசிய மீளாய்வை இலங்கை முன்வைப்பு

நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக சபையின் அனுசரணையில் கூடிய உயர் மட்ட அரசியல் மன்றத்தில், நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான இரண்டாவது தன்னார்வ தேசிய மீளாய்வை இலங்கை  (15) முன்வைத்தது.

‘அனைவருக்கும் நிலையான அபிவிருத்தியடைந்த தேசத்தை நோக்கிய உள்ளடக்கிய மாற்றம்’ என்ற தலைப்பிலான அறிக்கை ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியான தூதுவர் மொஹான் பீரிஸ் மற்றும் இலங்கையின் நிலையான அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் நாயகம் சமிந்திரி சபரமாது ஆகியோரால் மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்பின் உறுப்பு நாடுகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.

தற்போது எதிர்கொள்ளும் பொருளாதாரத் தடைகள் இருந்தபோதிலும், பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் ஒப்பிடுகையில், நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
தன்னார்வத் தேசிய மீளாய்வுச் செயற்பாட்டில் பின்பற்றப்பட்ட வழிமுறைகள், நிலையான அபிவிருத்தி இலக்கை செயற்படுத்துவதற்கான உரிமையை மேற்கொள்ள தேசிய மற்றும் பிராந்திய நிலைகள் எவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளன, தேசியக் கொள்கைகள் மற்றும் உத்திகளில் நிலையான அபிவிருத்தி இலக்குகள் எவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன என்பதை பகுப்பாய்வு செய்தல், 7 முக்கிய கருப்பொருள் துறைகளின் கீழ் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் இலங்கையின் முன்னேற்றத்தை முன்னிலைப்படுத்தல், 2030 நிகழ்ச்சி நிரலை செயற்படுத்துவதற்கான வளங்களைத் திரட்டுவதற்கான உத்திகளை சுட்டிக் காட்டுதல், மற்றும் முன்னோக்கிச் செல்லும் பாதையில் உத்திகளை முன்வைக்கும் அதே வேளையில், ஒரு நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தேசமாக நாட்டை எவ்வாறு சிறப்பாக மீண்டும் கட்டியெழுப்ப முடியும் போன்றவற்றை விவரிக்கும் விவரங்களை இந்த அறிக்கை உள்ளடக்கியிருந்தது.
 
இந்த ஆண்டு உயர்மட்ட அரசியல் மன்றத்தில் நாற்பத்து நான்கு நாடுகள் தன்னார்வ தேசிய மீளாய்வுகளை மேற்கொண்டதுடன், நிலையான அபிவிருத்தி இலக்கு 4: தரமான கல்வி, இலக்கு 5: பாலின சமத்துவம், இலக்கு 14: தண்ணீருக்குக் கீழான வாழ்க்கை, இலக்கு 15: நிலத்திலான வாழ்க்கை, மற்றும் இலக்கு 17: கூட்டாண்மை ஆகியன குறித்த ஆழமான மீளாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
 
‘கொரோனா வைரஸ் நோயிலிருந்து (கோவிட்-19) சிறப்பாக மீண்டு வருதல், நிலையான அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சி நிரலை முழுமையாக செயற்படுத்துதல்’ என்ற கருப்பொருளின் கீழ், அனைத்து நிலையான அபிவிருத்தி இலக்குகள் மற்றும் அதன் செயற்படுத்தல் மற்றும் இலக்குகளின் ஒருங்கிணைந்த, பிரிக்க முடியாத மற்றும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட தன்மை ஆகியவற்றில் கோவிட்-19 தொற்றுநோயின் வேறு தாக்கங்களை மன்றம் பரிசீலித்தது.
 
ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பணிமனை,
நியூயோர்க்
2022 ஜூலை 19

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.