மேற்கு வங்க மாநிலம், ஹவுரா மாவட்டத்தில் போலி மதுபானம் அருந்திய 7 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் சிலர் நேற்று இரவு போலியான மதுபானத்தை தெரியாமல் குடித்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து, வீட்டுக்குச் சென்றவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டிருக்கிறது.
அதையடுத்து, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அனைவரையும் மீட்ட அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சையைத் தொடங்கியிருக்கின்றனர். ஆனால், அனுமதிக்கப்பட்டவர்களில் 7 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர். தொடர்ந்து 20-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், போலீசார் போலி மது விற்கப்பட்டது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.