பீகாரில் நாகபஞ்சமியை முன்னிட்டு பாம்பு திருவிழா கொண்டாடும் கிராம மக்கள்: கோயிலில் ஆரத்தி எடுத்து சிறப்பு வழிபாடு

பாட்னா: பீகாரில் நாகபஞ்சமியை முன்னிட்டு பாம்பு திருவிழா வினோதமான முறையில் கொண்டாடப்பட்டது. பீகார் மாநிலத்தில் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள காளி கோயிலில் நாகபஞ்சமியை முன்னிட்டு திருவிழா நடைபெற்றது. இதில் அந்த மாவட்டம் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் உள்ள பாம்பாட்டிகள் கலந்து கொண்டனர். நாகபஞ்சமியை முன்னிட்டு ஒன்றாக கூடும் பாம்பாட்டிகளும், கிராம மக்களும் ஆற்றில் இறங்கி, மீன்பிடிப்பதை போல ஆர்வமுடன் பாம்புகளை பிடித்தனர். கைகளிலும், தலையிலும், கழுத்திலும் உயிருடன் உள்ள பாம்புகளை சுற்றிக்கொண்டு, மேளதாளமுடன் ஊர்வலமாக சென்றனர். வயது பேதமின்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாம்புகளுடன் கோயிலை நோக்கி அணிவகுத்து சென்றதை பார்வையாளர்கள் வியப்புடன் பார்த்தனர். பாம்புகளுடன் கோயிலை அடைந்த பின், அவற்றிக்கு ஆரத்தி காட்டப்பட்டு, வழிபாடு நடத்தப்படுகிறது. பாம்பு திருவிழா பரம்பரை பரம்பரையாக கொண்டாடப்படுவதாக கூறும் பாம்பாட்டிகள், இத்திருவிழாவில் பங்கேற்றால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர். அம்மனின் அருள் இருப்பதால், விஷப்பாம்புகளாகவே இருந்தாலும், அவற்றால் தங்களுக்கு தீங்கு ஏற்பட்டதில்லை என்று கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இதனிடையே பக்தி என்ற பெயரில் பாம்புகளை கொடுமைப்படுத்தக்கூடாது என்று விலங்குநல ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.