கர்நாடகாவில் காணாமல் போன கிளியை கண்டுபிடித்து கொடுத்தால் 50 ஆயிரம் ரூபாய் பரிசு என நூதன விளம்பரம் செய்துள்ள பறவையின ஆர்வலரின் செயல் அங்குள்ள மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெய் நகர் பகுதியில் வசித்து வருபவர் விலங்கின மற்றும் பறவையின் ஆர்வலர் ரவி. இவரது குடும்பத்தினரும் விலங்கு இனங்கள் மற்றும் பறவை இனங்களை வளர்ப்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். இவர் தனது வீட்டில் ‘ருஸ்துமா’ என்ற பெயரிடப்பட்ட இரண்டு ஆப்பிரிக்க சாம்பல் நிற அரிய வகை கிளிகளை செல்லமாக வளர்த்து வந்தார். அந்த கிளிகளும் இவர்கள் குடும்பத்துடன் மிகுந்த பாசத்துடன் வளர்ந்து வந்தது. இந்த நிலையில் இம்மாதம் 16 ம் தேதி முதல் இரண்டு கிளிகளில் ஒன்று காணாமல் போய் உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பல இடங்களிலும் அந்த கிளியை தேடும் முயற்சியில் ஈடுபட்டார். இருப்பினும் அந்த கிளி கிடைக்கவில்லை.
மேலும் அவர் குடியிருக்கும் வீட்டுப் பகுதியை சுற்றிலும், “கிளி தவறாக பறந்துவிட்டது. இங்குள்ள மக்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் பால்கனிகள், மொட்டை மாடிகள் மற்றும் மரங்களின் கிளைகளில் கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அதனால் வெகுதூரம் செல்ல முடியாது. எங்களால் பிரிவின் வலியை தாங்க முடியவில்லை. அனைவருக்கும் தகவல் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் அல்லது யாராவது பறவையை திருப்பிக் கொடுத்தால் அவர்களுக்கு அந்த இடத்திலேயே ரூ. 50,000 ரொக்கம் வழங்கப்படும்” என பொதுமக்களை கேட்டுக் கொள்வதாகக் கூறி ஒரு நூதன விளம்பர சுவரொட்டிகளை ஒட்டியுள்ளார்.
ஆண்டுதோறும் இந்த இரண்டு கிளிகளின் பிறந்தநாளை மிக விமர்சையாக கொண்டாடி வரும் நிலையில் ஒரு கிளி காணாமல் போனதிலிருந்து அவரும் அவரது குடும்பத்தாரும் மிகவும் மன வேதனை அடைந்திருப்பதாகக் கூறியுள்ளார். கிளியின்மீது குடும்பமே காட்டும் பாசமும், காணாமல் போன கிளியைக் கண்டுபிடித்து மீட்டெடுக்கும் அவர்களின் முயற்சியும் அங்குள்ள மக்களையும், பறவைகள் மற்றும் விலங்கின ஆர்வலர்களை நெகிழ வைத்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM