திருமலை: ஆந்திராவில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் சிக்கிய டேங்கர் லாரியில் இருந்து வழிந்தோடிய சமையல் எண்ணெயை மக்கள் போட்டிப்போட்டு பிடித்து சென்றனர். ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் சல்லகுண்டலா கிராமப்பகுதி வழியாக உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை 6 மணியளவில் சமையல் எண்ணெய் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி சென்றது. அந்த லாரி, திடீரென சாலையின் நடுவில் இருக்கும் தடுப்பின் மீது மோதி கவிழ்ந்தது. இதனால் டேங்கரில் உடைப்பு ஏற்பட்டு சமையல் எண்ணெய் சாலையில் ஆறாக ஓடியது. இதையறிந்த அப்பகுதி மக்கள் கேன்கள், குடங்கள், பாத்திரங்கள் உள்ளிட்டவற்றுடன் விரைந்து சென்று போட்டிப்போட்டு எண்ணெய்யை பிடித்து சென்றனர். மேலும் சுற்றுவட்டார கிராமத்தில் உள்ள தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கும் தெரிவித்தனர். அவர்களும் எண்ணெய்யை பிடிக்க போட்டி போட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த நகரிகல்லு போலீசார் விரைந்து வந்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதன்பின்னர் பொக்லைன் இயந்திரம் மூலம் லாரியை மீட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. இதனிடையே கேன்கள் மற்றும் குடங்களில் சமையல் எண்ணெயை பிடித்த மகிழ்ச்சியில் அங்கிருந்த பெரும்பாலான மக்கள் ‘செல்பி’ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.