பெங்களூரு,: ”இரவு ரோந்தில் ஈடுபடும் உதவி எஸ்.ஐ.,க்கள், கட்டாயமாக துப்பாக்கியுடன் செல்ல வேண்டும்,” என சட்டம் – ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., அலோக் குமார் உத்தரவிட்டார்.கர்நாடகா மாநில சட்டம் – ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., அலோக் குமார், மாநிலம் முழுதும் மண்டல வாரியாக சுற்றுப்பயணம் செய்து போலீசாருடன் ஆலோசித்து வருகிறார். வடகிழக்கு மண்டல உயர் அதிகாரிகளுடன் கலபுரகியில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
மண்டல ஐ.ஜி., மனீஷ் கர்பிகர், கலபுரகி கமிஷனர் ரவிகுமார், எஸ்.பி., இஷாபந்த், பீதர் எஸ்.பி., கிஷோர்பாபு, துணை கமிஷனர் அட்டூர் சீனிவாசலு போன்ற உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்துக்கு பின், அலோக் குமார் கூறியதாவது:சமூகத்தில் அமைதியை சீர்குலைக்கும் ரவுடிகள் மீது கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். குண்டர் சட்டம் பாய்ச்சவும் தயங்க மாட்டோம்.துப்பாக்கி உரிமம் பெற்றவர்களிடம் ஆய்வு செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர், ரவுடி பட்டியலில் சேர்க்கப்படுவர்.மக்கள் மற்றும் போலீசாரிடையே நல்லிணக்கம் ஏற்படும் வகையில், போலீஸ் நிலையங்களில் மக்கள் குறைதீர் முகாம் நடத்த வேண்டும். தினமும் மாலை 5:00 முதல், 6:00 மணி வரை, பார்வையாளர்கள் நேரம் கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும்.இதன் மூலம், குறிப்பிட்ட பிரச்னைகளை உடனுக்குடன் தீர்க்க முடியும். இரவு ரோந்தில் ஈடுபடும் உதவி எஸ்.ஐ.,க்கள், கட்டாயமாக துப்பாக்கியுடன் செல்ல வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement