புதுடெல்லி: எம்எல்ஏக்களுக்கு லஞ்சமாக பணமும், கேளிக்கை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டதாக கர்நாடக காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் திரவுபதி முர்மு உள்ளிட்டோர் மீது புகார் அளித்துள்ளது. கர்நாடகா மாநில காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் தலைமை தேர்தல் ஆணையத்திடம் அளித்த புகாரில், ‘கடந்த 17 மற்றும் 18ம் தேதிகளில் நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, வாக்களிக்கும் எம்எல்ஏக்களை ஐந்து நட்சத்திர சொகுசு விடுதிக்கு வரவழைத்து, அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. மேலும் அவர்களுக்கு பாஜக வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக ஆடம்பர அறைகள், சாப்பாடு, மது பானங்கள், கேளிக்கை வசதிகளையும், லஞ்சமாக பணத்தையும் பாஜக மூத்த தலைவர்கள் கொடுத்துள்ளனர். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இத்தனை வசதிகள் செய்து கொடுத்ததன் மூலம் ேதர்தல் நடத்தை விதிகளை அவர்கள் மீறியுள்ளனர். எனவே தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு, கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை, பாஜக மாநிலத் தலைவர் நளின் குமார், பாஜக மூத்த தலைவர் பி.எஸ்.எடியூரப்பா, சட்டப்பேரவை பாஜக தலைமைக் கொறடா சதீஷ் ரெட்டி, அமைச்சர்கள் மற்றும் பலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.நாளை வாக்கு எண்ணிக்கைஇந்தியாவின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நாடு முழுவதும் நடைபெற்றது. பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்காவுக்கும் இடையேதான் போட்டி நிலவுகிறது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேற்று மாலையுடன் அனைத்து மாநிலங்களில் இருந்தும் உதவி தேர்தல் அதிகாரியின் பாதுகாப்பு, கண்காணிப்புடன் டெல்லி கொண்டு வரப்பட்டன. இந்நிலையில் நாளை (ஜூலை 21) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அப்போதே புதிய ஜனாதிபதி யார்? என்பது தெரிந்துவிடும். வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் அதிகாரிகள் செய்துள்ளனர். புதியதாக தேர்வு செய்யப்படும் ஜனாதிபதி, வரும் 25ம் தேதி பதவியேற்க உள்ளார்.