கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் இன்றுவரை முடிவுக்கு வராமல் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்தப் போர் காரணமாக உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக புலம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர். இருப்பினும், ரஷ்யப் படைகள் தீவிரம் குறையாமல் தங்கள் தாக்குதல்களை தொடர்ந்துகொண்டிருக்கின்றனர்.
ஏவுகணைத் தாக்குதல்கள், ஷெல் தாக்குதல்கள் என உக்ரைன் மக்களுக்கு ரஷ்யாவின் அச்சுறுத்தல் தொடர்கிறது. இந்த இக்கட்டான சூழலிலும், உக்ரைனின் கிராமப் புறங்களில், மக்கள் விவசாயம் செய்துவருகின்றனர். ஆனால், அவ்வப்போது ரஷ்யத் தாக்குதலால் ஏற்படும் தீயால் விவசாயப் பயிர்கள் கருகிவிடுகின்றன.
இந்த நிலையில், ரஷ்யப் படைகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் உக்ரைனில் விவசாயம் செய்ய மக்கள் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பது தொடர்பாக, உக்ரைன் முன்னாள் தூதர் ஓலெக்சாண்டர் ஷேர்பா வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், “உக்ரைனில் விவசாயிகள் ஷெல் தாக்குதல்களுக்கு மத்தியில் தங்கள் பயிர்களைக் காத்து அறுவடையை உறுதியசெய்ய முயல்கின்றனர்” என்ற கேப்ஷனுடன் அந்த வீடியோவைப் பகிர்ந்திருக்கிறார்.
அதில், ஷெல் தாக்குதலால் தீப்பிடித்த விளைச்சல் பகுதியை தண்ணீர் மூலம் விவசாயி ஒருவர் அணைக்கிறார். அதை மற்ற பகுதிகளுக்கு பரவ விடாமல் மற்றொரு விவசாயி தடுக்கிறார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.