கர்நாடகாவில் நோயாளியுடன் வந்த ஆம்புலன்ஸ் ஒன்று, மழை காரணமாக கட்டுப்பாட்டை இழந்து சுங்கச் சாவடியில் மோதி விபத்துக்குள்ளான காட்சிகள் வெளியாகியுள்ளது. பார்ப்பவரை பதறவைக்கும் இந்த விபத்தில், 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டம் ஷிரூர் சுங்கச் சாவடியில் தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பெண் நோயாளி மற்றும் அவருடன் இரண்டு உதவியாளர்கள் ஆகிய 3 பேரையும் ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு ஹொன்னவரிலிருந்து, குண்டப்பூர் மருத்துவமனை நோக்கி ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வேகமாக சென்றுக் கொண்டிருந்தார். தற்போது அங்கு நல்ல மழை பெய்து வரும் நிலையில், சாலைகள் ஈரமாக காட்சியளிக்கின்றன.
இந்நிலையில், ஷிரூர் சுங்கச்சாவடி அருகே மாலை 4 மணியளவில் ஆம்புலன்ஸ் வந்துக்கொண்டிருந்ததை அறிந்த சுங்கச் சாவடி ஊழியர்கள் அங்கிருந்த பிளாஸ்டிக் தடுப்புகளை வேகவேகமாக அகற்றிக் கொண்டிருந்தனர். முதலில் இருந்த இரு தடுப்புகளை சுங்கச் சாவடி ஊழியர் ஒருவர் அகற்றிய நிலையில், சுங்க கட்டணம் வசூலிக்கும் பூத் அருகில் இருந்த தடுப்பை அகற்ற ஊழியர் ஒருவர் முற்பட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அதிவேகமாக வந்த ஆம்புலன்ஸ், சாலையில் கிடந்த மழைநீரில் கட்டுப்பாடை இழந்து, சுங்கச்சாவடி ஊழியர் மற்றும் பூத் மீது மோதியவாறு தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஆம்புலன்சில் இருந்த பெண் நோயாளி, உதவியாளர்கள், சுங்கச் சாவடி ஊழியர் என 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம்புலன்சை ஓட்டிவந்த ஓட்டுநர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கோர விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதறவைத்துள்ளது.
Horrific accident of an ambulance losing control and crashing into a toll booth at #Shiroor toll booth has been captured by cctv. The ambulance was on its way from #Kundapura from #honnavara. Four people have been injured. #Karnataka pic.twitter.com/wMKT4wUbSq
— Imran Khan (@KeypadGuerilla) July 20, 2022
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM