இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் (IRCTC)யின் விதிமுறைகளின்படி, பயணிகள் தங்கள் ரயில் டிக்கெட்டுடன் உணவை முன்பதிவு செய்யவில்லை என்றால், பயணத்தின் போது ஆர்டர் செய்யும் உணவிற்கு சர்வீஸ் சார்ஜாக 50 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படும். உதாரணமாக 20 ரூபாய் டீ-க்குக் சர்வீஸ் சார்ஜாக 50 ரூபாய் செலுத்தி மொத்தம் 70 ரூபாய் எனச் செலுத்த வேண்டியிருக்கும். இது ராஜ்தானி, துரந்தோ அல்லது சதாப்தி போன்ற பிரீமியம் ரயில்களில் நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் டெல்லி – போபால் இடையே இயங்கும் போபால் சதாப்தி ரயிலில் பயணித்த பயணி ஒருவர் டிக்கெட்டுடன் உணவை முன்பதிவு செய்யாமல் பயணத்தின்போது 20 ரூபாய் மதிப்புள்ள டீ ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்தபின் டீ-க்கான பில்லைப் பார்த்தபோதுதான் அவருக்குத் தெரிந்துள்ளது, வெறும் 20 ரூபாய் டீ-க்கு சர்வீஸ் சார்ஜாக 50 ரூபாய் சேர்த்து மொத்தம் 70 ரூபாய் என வசூலிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அந்த பில்லை சமூகவலைதளங்களில் பதிவிட்டு தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.
இதைக் கண்ட சமூகவலைதளப் பயனர்கள் பலர் அந்தப் பயணியின் பதிவை IRCTC-யுடன் டேக் செய்து பகிர்ந்துள்ளனர். இந்த விவகாரம் வைரலாதைத் அடுத்து இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் விலையில் மாற்றங்களைச் செய்துள்ளது. இப்போது ராஜ்தானி, துரந்தோ அல்லது சதாப்தி போன்ற பிரீமியம் ரயில்களில் பயணம் செய்பவர்கள், தங்கள் உணவை முன்பதிவு செய்யாமல் பயணத்தின் போது ஆர்டர் செய்தால் டீ, காபிக்கு வசூலிக்கப்படும் 50 ரூபாய் சர்வீஸ் சார்ஜ் வசூலிக்கப்படாது. அதற்குரிய விலை மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும். ஆனால் அதேசமயம் மற்ற உணவுகளுக்கு 50 ரூபாய் சர்வீஸ் சார்ஜ் வசூலிக்கப்படுவது தொடரும் என்று அறிவித்துள்ளது.