தமிழக அரசின் டாஸ்மாக் கடைக்கு போட்டியாக செங்கல்பட்டு அருகே தனியாக மது விற்பனை நடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்
செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலை ஓரமாக தமிழக அரசின் மதுபான கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடை அருகே திருட்டுத்தனமாக மதுபானங்களை விற்பனை செய்து வருவதாக, கூடுவாஞ்சேரி மதுவிலக்கு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், டாஸ்மாக் கடைக்கு போட்டியாக அங்கு மது விற்பனை நடந்து கொண்டிருப்பதை பார்த்தனர்.
பின்னர், மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த சென்னை ஜாபர்கான்பேட்டை சேர்ந்த சிவானந்தம், ராமநாதபுரத்தை சேர்ந்த சிவா ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 11 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல், வண்டலூர் வெளிவட்ட சாலை பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடை அருகே, கள்ளச் சந்தையில் மது பாட்டில்களை விற்பனை செய்து வந்த, பழைய பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த பாபு என்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், அவரிடம் இருந்த 17 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். இந்த இரு சம்பவம் குறித்தும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.