ஆன்லைன் பார்மஸி துறையில் முக்கியமான நிறுவனம் பார்ம் ஈஸி. இந்த நிறுவனத்தின் ஐபிஓ 2022-ம் ஆண்டு வெளியாகும் என கணிக்கப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களில் வெளியான ஐபிஓகள் பெரிய வெற்றியை அடையவில்லை. வெளியீட்டு விலையை விட குறைந்த விலைக்கே வர்த்தகமாகி வருகின்றன. தவிர சர்வதேச சூழலும் ஐபிஓ கொண்டுவருவதற்கு ஏற்றதாக இல்லை. இதனால் பார்ம் ஈஸி நிறுவனத்தின் ஐபிஓ தள்ளிப்போகிறது.
அதனால் பார்ம் ஈஸி நிறுவனம் நிதி திரட்டும் சூழல் உருவாகி இருப்பதாக தெரிகிறது. சுமார் 20 கோடி டாலர் அளவுக்கு நிதி திரட்ட இருப்பதாகவும், கடந்த முறை நிதி திரட்டியதைவிட 15 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை குறைந்த மதிப்பில் நிதி திரட்ட இருப்பதாவும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது.கடந்த முறை நிதி திரட்டும்போது நிறுவனத்தின் சந்தை மதிப்பு 5.1 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால் தற்போது 3.8 பில்லியன் டாலர் சந்தைமதிப்பில் புதிய நிதியை திரட்ட இருப்பதாக தெரிகிறது.
சிறிய நிறுவனங்கள் சந்தை மதிப்பை குறைத்து நிதி திரட்டுவது இயல்பு. ஆனால் சமீப காலத்தில் பெரிய நிறுவனம் சந்தை மதிப்பை குறைத்து நிதி திரட்டுவது இப்போதுதான். 2022-ம் ஆண்டு ஐபிஒ மூலம் சுமார் ரூ.6250 கோடி நிதி திரட்ட பார்மி ஈஸி திட்டமிட்டிருந்தது. ஆனால் நடப்பாண்டில் ஐபிஓவுகான சாத்தியங்கள் குறைவு. தவிர நிறுவனத்தின் வருமானம் அதிகரிக்கும் வேலையில் செலவும் அதிகரித்துவருவதால் நஷ்டத்தில் செயல்படுகிறது நிறுவனம். அதனால் குறைந்த சந்தை மதிப்பில் நிதி திரட்டுவது என்பது தவிர்க்க முடியாதது.
தற்போதைய சூழலில் அடுத்த ஆண்டுதான் ஐபிஓ வெளியிட முடியும். தவிர, ஐபிஓ அனுமதிக்காக செபியிடம் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டி இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM