நாமக்கல்: “பொதுமக்கள் மத்தியில் எனக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்காக எனது வீடு, அலுவலகம், தொழிற்சாலையில் பொதுப் பணித்துறை, லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்” என அதிமுக முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளயைம் அருகே கோவிந்தம்பாளையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி எம்எல்ஏ வீடு அமைந்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு அவரது வீடு உள்பட 32 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் உள்ளவை சரியாக உள்ளனவா என கோவிந்தம்பாளையத்தில் உள்ள தங்கமணி வீடு, அலுவலகம் மற்றும் சாய தொழிற்சாலையில் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் புதன்கிழமை திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.
அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்எல்ஏ வீட்டில் இருந்தார். காலை தொடங்கிய இந்த ஆய்வு மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது.
இதைத்தொடர்ந்து அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் கூறியது: “கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை செய்ததன் அடிப்படையில் கிட்டதட்ட 70 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடத்தை அளவீடு செய்யவும், மதிப்பீடும் செய்யவும் பொதுப்பணித் துறை, லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் வருவாய் துறையினரும் இன்று வந்தனர். காலை எங்களது வீடு, அலுவலகம் மற்றும் தொழிற்சாலையில் ஆய்வில் ஈடுபட்டனர்.
அந்த தொழிற்சாலையைப் பொறுத்தவரை நான் பிறப்பதற்கு முன்பே கட்டிய தொழிற்சாலை. ஆனால், வேண்டுமென்றே பொதுமக்கள் மத்தியில் எனக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்காக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதனை சட்டப்படி எதிர்கொள்வேன்” என்றார்
தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகம் திறக்க நீதிமன்ற பிறப்பித்த உத்திரவு குறித்த கேள்விக்கு, “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.மீண்டும் தர்மமே வெல்லும். நியாயம் எங்கு உள்ளதோ அதுதானே ஜெயிக்கும்” என்றவரிடம், ஓபிஎஸ் தரப்பில் நீதிமன்றம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்று கேட்டதற்கு “எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும், நியாயம் எங்கு உள்ளதோ அதுதான் ஜெயிக்கும்” என்று தங்கமணி கூறினார்.