“வடை, பஜ்ஜி உள்ளிட்ட உணவுப் பொருள்கள் அச்சிட்ட பேப்பரில் வழங்கத் தடை!" – தூத்துக்குடி ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், உணவுப் பாதுகாப்புத்துறையின் சார்பில் கடைகளில் வடை, பஜ்ஜி போன்ற உணவுப் பொருள்களை அச்சிட்ட பேப்பர்களில் வைத்து வழங்குவதால் ஏற்படும் விளைவுகள் மற்றும் அதனை தவிர்ப்பது குறித்து தயாரிக்கப்பட்ட ”கருப்பு மை” என்ற விழிப்புணர்வு குறும்படத்தை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தூத்துக்குடி மாவட்டத்தில் வடைக் கடைகள், தேநீர் கடைகள், உணவகங்கள், பேக்கரிகள், இனிப்பகங்கள் உள்ளிட்ட கடைகளில் பஜ்ஜி, போண்டா, முட்டைகோஸ், பப்ஸ், ஸ்வீட்ஸ் மற்றும் இதர பொருள்கள் பொதுமக்களுக்கு அச்சிடப்பட்ட நியூஸ் பேப்பர் மற்றும் காகிதங்களில் பரிமாறுவதும், பார்சல் கட்டுவதும், தொடர்ந்து நடந்து வருகிறது.

அச்சிடப்பட்ட பேப்பரில் பஜ்ஜி

வணிகர்களின் இந்த மாதிரியான பாதுகாப்பற்ற வணிகப் பழக்கவழக்கங்கள் பொதுமக்களின் பொது சுகாதார நலன் பாதிக்கப்படும். அச்சிடப்பட்ட நியூஸ் பேப்பரில் விநியோகிக்கப்படும் உணவுப் பொருள்களைத் தொடர்ந்து உண்ணும் பொதுமக்களுக்கு அந்தப் பேப்பரின் அச்சு மையில் உள்ள காரீயத்தினால், வயிற்றுப்புண் ஏற்பட்டு பின்னாளில் அது கேன்சராக உருவெடுக்கும் வாய்ப்புகள் அதிகம்.

எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் வடை, பஜ்ஜி போன்ற இதர பொருள்கள் அச்சிடப்பட்ட நியூஸ் பேப்பர்களில் வழங்கத் தடை செய்யப்பட்டிருக்கிறது. மேலும், பாதுகாப்பற்ற மற்றும் தரம் குறைந்த உணவுப் பொருள்களை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு அபராதம் விதிப்பது, வணிகர்களுக்கு எதிராக வழக்கு தொடர்வது போன்ற நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் எடுக்கும். பொதுமக்களின் பொது சுகாதார நலனைக் கருத்தில் கொண்டு சட்ட நடவடிக்கையும், வணிகர்களுக்கும், நுகர்வோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளோம். அதனடிப்படையில், அச்சிடப்பட்ட நியூஸ் பேப்பர் மற்றும் காகிதங்களில் உணவைப் பரிமாறுவதாலும், பார்சல் கட்டுவதாலும் ஏற்படும் அபாயங்கள் மற்றும் சமூக பொறுப்புகள் குறித்து , அருந்ததி அரசு என்பவர் இயக்கியுள்ள ’கருப்பு மை’ என்ற விழிப்புணர்வு குறும்படத்தை மக்கள் அனைவரும் பார்க்க வேண்டும்.

அச்சிட்ட பேப்பரில் வடை

மேலும், உணவுப் பொருள்களை வாழை இலை, பனை இலை, மூலம் மக்களின் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காமல் உள்ள இயற்கை முறையிலான பிளேட்டுகளில் உண்ண வேண்டும். மக்களிடம் உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பாலித்தீன் பைகளை பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் கடைகள்மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். பாலித்தீன் பேப்பர் தயாரிப்பு நிறுவனங்களில் ஆய்வு செய்து சட்டபடியான நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க `8680800900‘ என்ற எண்ணுக்கு அழைக்கலாம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.