தமிழ் திரையுலகில் தனது நடிப்பு, சக நடிகர்கள் மீதான மரியாதை நடிகர் சங்கத்தின் கடனை அடைப்பதற்கான முயற்சி உள்ளிட்ட ஏராளமான செயல்கள் மூலம் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் சக நடிகர்கள் மத்தியிலும் புகழின் உச்சத்தில் இருப்பவர் விஜயகாந்த்.
சினிமாவில் தான் உச்ச நட்சத்திரம் என்றாலும் கூட, அதை பெரியதாக காட்டிக்கொள்ளாமல், நடிகர் சங்க கலைநிகழ்ச்சிக்ககாக சக நடிகர்களை அழைக்க அவர்களது வீட்டிற்கு செல்லும்போது சாதாரன மனிதனாக தரையில் அமர்ந்து அழைப்பாரம் விஜயகாந்த். இவரின் சொல்லுக்கு மதிப்பு கொடுத்து படப்பிடிப்பு இருந்தாலும் அதை விட்டுவிட்டு கலை நிகழ்ச்சிக்கு சென்ற நடிகர்கள் பலர் தமிழ் சினிமாவில் உண்டு.
பாசத்தின் மறுபக்கமாக இருக்கும் விஜயகாந்த் சக நடிகர்களிடம் தவறை சுட்டிக்காட்டி தாழ்மையுடனும் உரிமையுடனும் அவர்களை கண்டிப்பாராம். பொதுவாக பெரும்பாலும் ஆக்ஷன் படங்களில் நடித்துள்ள விஜயகாந்த் குறும்பத்தனத்தில் மன்னன் என்று திரை வட்டாரத்தில் ஒரு பேச்சு இருக்கிறது. இதை அவர் நடித்த காமெடி காட்சிகளின் மூலம் நாம் தெரிந்துகொள்ளலாம்.
அதே சமயம், கேமராவுக்கு பின்னால் சக நடிகர்கள் மட்டுமல்லாது, டெக்னீஷியன்கள் பலரையும் வம்பிழுத்து ரகளை செய்வார் என்று நடிகர்களே பலர் பேட்டியில் சொல்வதை கேட்டிருக்கிறோம். சீட்டுக்கட்டு ஆட்டத்தில் தனது குறும்புத்தனத்தின் மூலம் வெற்றி பெற்று அந்த பணத்தில் அனைவருக்கு பிரியாணி வாங்கி கொடுத்துவிடுவது போன்ற விளையாட்டு குணம் கொண்டவர் விஜயகாந்த்.
இந்நிலையில், விஜயகாந்த்துடன் 14 படங்களில் இணைந்து நடித்துள்ள நடிகை நளினி, சமீபத்திய ஒரு பேட்டியில் அவரின் குறும்புத்தனத்தை பற்றி பேசியுள்ளார். இதில் அவர் பேசுகையில், நான் ஒல்லியாக இருக்க வேண்டும் என்பதற்காக டயட்டில் இருக்க எங்க அம்மா சொல்வாங்க. ஆனா விஜயகாந்த் அண்ணா நீ கேரவன்ல போய் உக்காரு ராவுத்தர் சாப்பாடு கொண்டு வருவாரு நீ சாப்பிடு. அம்மாவ நா சமாளிச்சிக்கிற என்று சொல்வர்.
அப்போது எங்க அம்மா என்னப்பா என்று கேட்டால்.. அது ஒன்னும் இல்லம்மா எனக்குதான் சாப்பாடு கொண்டு போகிறான். உங்க பொண்ணுக்கு நான் குடுப்பேனா, ஏற்கனவே அவர் சாப்பிட்டு குந்தாணி மாதிரி இருக்கா என்று சமாளித்து விட்டு உடனே கேரவனுக்கு வந்து நல்லா சாப்பிடு என்று சொல்லிவிட்டு செல்வார்.
அதேபோல் அவரும் நானும் 14 படங்களில் இணைந்து நடித்துள்ளோம். அப்படி இருந்தும் அவரை நான் அண்ணா என்றுதான் அழைப்பேன். அதனால் கட்டிப்பிடித்து நடிக்கும் காட்சி வந்தால், அண்ணா நல்லா கட்டிப்பிடிங்கண்ணா கூச்சப்படாதீங்க என்று சொல்வேன். ஆனா கட்டிப்பிடிக்கும்போது அண்ணானு சொன்ன எப்படி நடிக்கிறது என்று என்னை தள்ளி விடுவார் என்று நளினி கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”