இலங்கையில் எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட, திரு ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் விசேட உரையை நிகழ்த்தினார்.
தான் 45 வருடங்கள் பாராளுமன்றத்தில் இருந்ததாகவும், தனது வாழ்க்கை பாராளுமன்றத்திலேயே இருப்பதாகவும் திரு ரணில் விக்ரமசிங்க இதன் போது குறிப்பிட்டார். எனவே, பாரளுமன்றம் தனக்கு வழங்கிய இந்த மரியாதைக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
தனக்காக வாக்களித்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் புதிய ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்….
“நாட்டின் இளைஞர்கள் இன்று இந்த அமைப்பில் மாற்றத்தைக் கோருகின்றனர். இன்று உலகில் பல பிரச்சனைகள் காணப்படுகின்றன. அவற்றிற்கு முகம் கொடுத்து நாம் முன்னோக்கி செல்ல வேண்டும். அதற்காக நாம் புதிய வேலை திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும். மக்கள் எங்களிடம் பழைய அரசியலை கேட்கவில்லை. இந்த பாரளுமன்றம் ஒன்றிணைந்து புதிய அரசியல் முறையை பணியை நிறைவேற்ற வேண்டும் என்று நான் விசேடமாக கேட்டுக்கொள்கிறேன்.
என்னுடன் போட்டியிட்ட அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்கவுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து புதிய நடைமுறையொன்றை கொண்டுவர வேண்டும் என்று நான் டலஸ் அழகப்பெருமவிடம் கேட்டுக்கொள்கிறேன். எனது நண்பர் அனுரகுமார திஸாநாயக்கவிடமும் இதே கோரிக்கையை முன்வைக்கிறேன். அத்துடன், எனது நண்பர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடமும் இந்தக் கோரிக்கையை முன்வைக்க விரும்புகின்றேன்.
இன்று நாம் அனைவரும் ஒன்றிணைந்து புதிய நடைமுறை ஒன்றை கொண்டு வருவோம். அதைப்பற்றி தான் நாம் கலந்துரையாட வேண்டும். அதேபோன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் உட்பட அனைவரிடமும் இதே கோரிக்கையை முன்வைக்கிறேன். எமது பாராளுமன்ற உறுப்பினர் திரு. பொன்னம்பலம் , விக்னேஸ்வரன் ஆகியோரிடமும் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற இந்தக் கோரிக்கையை முன்வைக்கிறேன். அதேபோன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களிடமும் கட்சியின் சார்பில் இதே கோரிக்கையை முன்வைக்கின்றேன். அதேபோன்று இங்கு வந்துள்ள எமது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடமும் இதே கோரிக்கையை முன்வைக்கின்றேன். இப்போது நாம் பிரிந்திருந்தது போதும். நாம் ஒன்றாக இணைந்து கலந்துரையாடி ஒன்றாக செயற்படுவோம். நான் நாளை முதல் உங்கள் அனைவருடனும் கலந்துரையாட விரும்புகின்றேன்.”என்று தனது உரையை முடித்துக் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனக்கு பாராளுமன்ற கட்டிடத்தில் பதவிப்பிரமாணம் செய்ய அனுமதிக்குமாறும் சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார்.
Mohamed Faizul