மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த தொழிலதிபர் ராம்ராவ் பட்(58) என்பவர் நேற்று முந்தினம் பிற்பகலில் தனது மனைவி, மகனை காரில் அழைத்துக்கொண்டு ஹோட்டலுக்கு சாப்பிட போகலாம் என்று கூறி கூறினார். கார் ஹோட்டலுக்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் காரை சாலையோரம் நிறுத்திய ராம்ராவ் தனது காரின் கதவை திறக்க முடியாத படி மூடிவிட்டு, பெட்ரோலை எடுத்து தன் மீதும் தனது மனைவி சங்கீதா மற்றும் மகன் நந்தன் மீதும் ஊற்றினார். பின்னர் யாரும் எதிர்பாராத நேரத்தில் காரோடு தீவைத்துக்கொண்டார்.
இதில் ராம்ராவ் மனைவி, மகன் ஆகியோர் காரில் இருந்து வெளியில் குதித்தனர். ஆனாலும் அவர்கள் இருவரும் தீவிபத்தில் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ராம்ராவ் காரிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், “ராம்ராவ் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார். அதனை படித்துபார்த்த போது ராம்ராவ் நிதிநெருக்கடியில் சிக்கி இருந்தது தெரிய வந்தது. அதில், `வியாபாரம் நஷ்டமானதால் பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டுவிட்டது. அதனால் இந்த முடிவை மேற்கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். ராம்ராவ் தொழிலுக்காக பல இடங்களில் கடன் வாங்கி இருந்தார். ஆனால் கடனை சரியான நேரத்தில் திரும்ப கொடுக்க முடியவில்லை. எனவே தான் தான் மட்டும் தற்கொலை செய்தால் தனக்கு பணம் கொடுத்தவர்களால் தனது குடும்பத்திற்கு பிரச்னை ஏற்படும் என்று கருதி குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்” என்று தெரிவித்தார்.