“என்னை பொறுத்தவரைக்கும் பாசிட்டிவ் எனர்ஜியைத்தான் நான் கடவுள் நம்பிக்கையா பார்க்கிறேன். சாமியோட முகத்தை பார்க்கும்போது மனசுல புதுவிதத் தெம்பு வர்றதை நிச்சயம் உணர முடியும்!” என்றவாறு பேசத் தொடங்கினார் ஸ்வாதி. இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான `ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி’ தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரை உலகில் அறிமுகமானார். அவருடைய ஆன்மிக அனுபவம் குறித்து நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.
“என்னோட இஷ்ட தெய்வம்னா அது துர்கை அம்மாதான்! அவங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். எங்க குடும்பத்துடைய குல தெய்வம் பெருமாள். சின்ன வயசில இருந்தே கடவுள் மீது எனக்குப் பற்று அதிகம். தேர்வு நெருங்கும் போது நிச்சயமா குறைந்தபட்சம் இரண்டு, மூன்று கோயிலுக்காவது போயிட்டு வந்துடுவேன். தினமும் சாமியை வழிபட்டுட்டுத்தான் ஸ்கூலுக்கே போவேன். அப்படி ஆரம்பித்த பழக்கம்தான்!
நான் ரொம்ப ஹார்டுஒர்க் பண்ணுவேன். அதுக்கான பலன் உடனே கிடைக்கலைன்னாலும் கண்டிப்பாகக் கிடைக்கும். அதைக் கடவுள்தான் எனக்கு உணர்த்தினாங்க. தமிழ் சீரியல் பண்ணணும்னு ரொம்பவே ஆசைப்பட்டேன். அது உடனே நடக்கலைன்னாலும் தாமதமானாலும் இப்ப நடந்துடுச்சுல… அதைத்தான் சொன்னேன்” என்றவர் தொடர்ந்து பேசினார்.
“நான் சீரியல் ஆர்ட்டிஸ்ட். எப்ப சீரியல் முடியப் போகுதுன்னுலாம் தெரியாது. நிரந்தர வருமானம் வரக் கூடிய வேலை கிடையாது. அப்படி ஷூட் முடிஞ்சு என்ன பண்றதுன்னு உட்கார்ந்த சமயம் சட்டென ஒரு விளம்பரப்படத்துல நடிக்க வாய்ப்பு கிடைச்சது. ஏதோ ஒரு வகையில் வருமானம் கிடைக்க வழி வகை செய்து கொடுக்கிறார் கடவுள்னு தோணுச்சு.
நான் நிறைய கோயில்களுக்குப் போவேன். மைசூர் சாமூண்டீஸ்வரி கோயிலுக்கு அடிக்கடிப் போவேன். இப்ப கொரோனா காரணமா 2, 3 வருஷமாப் போக முடியல. திடீர்னு ஒரு நாள் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து போகலாம்னு முடிவு பண்ணி போயிட்டு வந்தோம். அப்படி நானா பிளான் பண்ணாம திடீர்னு நிறைய கோயில்களுக்குப் போயிட்டு வந்திருக்கேன். அப்போதெல்லாம் கடவுளே நம்மளைக் கூட்டிட்டு போகிறார்னு தோணும்” என்றவர் பாபாவுக்கும், அவருக்குமான நெருக்கம் குறித்து பேசினார்.
“வருஷத்துக்கு ஒருமுறை நிச்சயமா ஷீர்டி சாயிபாபா கோயிலுக்குப் போயிட்டு வந்திடுவேன். மீடியாத் துறைக்குள் வர்றதுக்கு முன்னாடி படிச்சு முடிச்சிட்டு ஒரு கம்பெனியில் வேலைக்குப் போயிட்டு இருந்தேன். அந்தச் சமயம் எனக்கு உடல்நிலை ரொம்ப மோசமாகி கோமா ஸ்டேஜ் அளவுக்கு போயிட்டேன். நான் பொழச்சதே பெரிய விஷயம். எங்க வீட்ல ஷீர்டிக்குப் போய் எனக்காக வேண்டிக்கிட்டு விபூதி எல்லாம் வச்சு விட்டிருக்காங்க. அவங்களுடைய வேண்டுதலின் பலனா நான் பிழைச்சேன். சாயிபாபாதான் எனக்குப் புது வாழ்க்கையைக் கொடுத்தார். அவர் கொடுத்த வாழ்க்கையைத்தான் இப்ப நான் வாழ்ந்துட்டு இருக்கேன். அதுல இருந்து தவறாம ஷீர்டிக்கு போய் அவரைப் பார்த்து தரிசனம் செய்துட்டு வர்றதை வழக்கமா வச்சிருக்கேன்.
கோயிலுக்குப் போகிறதுக்கு முன்னாடி மனசுல பல கவலைகள், குழப்பங்கள் எல்லாம் இருக்கும். போய் அவரைப் பார்த்துட்டு வரும்போது ‘நான் இருக்கேன்’ என்கிற உணர்வை அவர் கொடுப்பார். நமக்கு நல்லதுதான் நடக்கும் என்கிற பாசிட்டிவ்வான சிந்தனைகள் ஏற்படும். ஒவ்வொரு முறையும் பாபா கோயிலுக்குப் போயிட்டு வரும்போது அவருடைய சிலை வாங்கிட்டு வருவேன். கல்யாணம் முடிஞ்சு புகுந்த வீட்டுக்கு போகிறதுக்கு முன்னாடிவரை எங்க வீட்ல கிட்டத்தட்ட 20 பாபா இருந்தாங்க. கல்யாணத்துக்குப் பிறகு வீட்ல ஒரு பெரிய பாபா சிலை வாங்கி வச்சு அதை வழிபடுறோம். இப்ப வாங்குற பாபா சிலையை நெருக்கமான நண்பர்களுக்குப் பரிசளிக்கிறேன்” என்றவரிடம் சென்னையில் பிடித்த கோயில்கள் குறித்துக் கேட்டோம்.
“என்னோட ஊர் பெங்களூருவாக இருந்தாலும் சென்னைக்கு ஷூட்டிங்கிற்காக வர்றதுக்கு முன்னாடியே மேல்மருவத்தூர் கோயிலுக்கு வருவேன். என்னுடைய ஃபேவரைட் கோயில்களுள் அதுவும் ஒன்று. ஐந்து வருஷமா மாலை போட்டிருக்கேன். இப்ப ஷூட்டிங்கிற்காக வர்றப்பவும் தவறாம அங்க போயிட்டு வந்திடுவேன். அதே மாதிரி, வடபழனி முருகன் கோயிலுக்கும் அடிக்கடி போவேன்!” என்றார்.