நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராகிறார். சோனியா காந்தியை விசாரணைக்கு அழைத்ததைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸார் இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை காங்கிரஸின் யங் இந்தியா நிறுவனம் வாங்கியதில் பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த 2012-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த விவகாரத்தில் சுமார் ரூ. 2,000 கோடி அளவுக்கு பண மோசடி இதில் நடைபெற்றுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, இதுதொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதனிடையே, கடந்த மாதம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவரிடம் 5 நாட்களில் 50 மணிநேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதை கண்டித்து டெல்லி அமலாக்கத்துறை தலைமையகம் முன்பு நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ப. சிதம்பரம், பிரமோத் திவாரி ஆகியோர் போலீஸாரால் தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
சோனியாவுக்கு விலக்கு
அந்த சமயத்திலேயே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதால் இந்த சம்மனை சிறிது நாட்களுக்கு தள்ளி வைக்குமாறு சோனியா சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதன்பேரில், அவர் ஆஜராவதில் இருந்து அமலாக்கத்துறை விலக்கு அளித்திருந்தது.
இன்று ஆஜர்
இந்நிலையில், கொரோனா தொற்றில் இருந்து சோனியா காந்தி மீண்டதை அடுத்து, ஜூலை 21-ம் தேதி விசாரணக்கு ஆஜராக அமலாக்கத்துறை சார்பில் கடந்த வாரம் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் சோனியா காந்தி இன்று காலை 11 மணிக்கு ஆஜராக உள்ளார். சோனியா காந்தியிடம் ஒரு மத்திய புலனாய்வுத் துறை விசாரணை நடத்துவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
போராட்டம்
இதற்கிடையே, சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதை கண்டித்து நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அமலாக்கத்துறை தலைமையகம் முன்பும் இன்று காங்கிரஸார் போராட்டம் நடத்தவுள்ளனர். இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே இல்லத்தில் நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது நாடு முழுவதும் போராட்டம் நடத்த காங்கிரஸாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
பயமுறுத்த முடியுமா?
இதுகுறித்து காங்கிரஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், “உலக வரலாற்றையே மாற்றிய குடும்பப் பின்னணி கொண்ட சோனியா காந்தியை அமலாக்கத்துறை அச்சுறுத்த முடியுமா?” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM