மும்பை : இந்தியாவில் எரிவாயு, மின்சாரம், துறைமுகம் போன்ற உள்கட்டமைப்புத் துறைகளில் கோலோச்சும் தொழில் அதிபர் கெளதம் அதானிக்கு கடந்த 8 ஆண்டுகளாக தொட்டதெல்லாம் துலங்குகிறது. அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெற்று வரும் அதானி இந்தியாவின் முதல் கோடீஸ்வரராக திகழ்ந்த முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளியதுடன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆசியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர் என்ற பெருமையையும் பெற்றார். 0நிறுவனர் எலான் மஸ்க், பிரெஞ்சு கோடீஸ்வரர் பெர்னார்ட் அர்னால்ட், அமேசான் உரிமையாளர் ஜெப் பெஸோஸ், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் ஆகியோரை தொடர்ந்து 5வது இடத்தை அதானி பிடித்தார். கடந்த வாரம் பில்கேட்ஸ் வெளியிட்ட அறிவிப்பு கோடீஸ்வரர்கள் வரிசையில் அதானியை ஒருபடி மேலே ஏற்றியுள்ளது. அதாவது தமது சொத்துக்களில் 1.6 லட்சம் கோடியை பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்குவதாக பில்கேட்ஸ் அறிவித்ததால் அவரது சொத்து மதிப்பு 8.3 லட்சம் கோடி ரூபாயாக குறைந்து போனது. இதனால் 9.25 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்டுள்ள அதானி கோடீஸ்வரர்கள் பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். கோடீஸ்வரர்கள் வரிசையில் முதல் 3 இடங்களில் எந்தவித மாற்றமும் இன்றி எலான் மஸ்க், பெர்னார்ட் அர்னால்ட், ஜெப் பெஸோஸ் தொடர்கின்றனர்.