கும்பகோணம் பகுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல நூறு கோடி மதிப்புடைய பழைமையான, கிருஷ்ணர் உள்ளிட்ட 6 ஐம்பொன் சாமி சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் பறிமுதல் செய்ததுடன், சிலைகள் பதுக்கி வைத்திருந்தவரையும் கைது செய்துள்ளனர்.
கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். ஸ்ரீதர்சன் ஆர்ட் மெட்டல்ஸ் என்ற பெயரில் சாமி சிலைகள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். ராமலிங்கம் தன் நிறுவனத்தில் பழங்கால சாமி சிலைகள் பதுக்கி வைத்திருப்பதாகவும், அதனை தென்னாப்பிரிக்கா நாட்டிற்கு கடத்த இருப்பதாகவும் ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இதனை தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி.,ஜெயந்த் முரளி உத்தரவின் பேரில் ராமலிங்கம் நிறுவனத்தில் சிலை கடத்தல் தடுப்பு போலீஸார் சோதனை நடத்தினர்.
அதில் கிருஷ்ணர், திருவாச்சியுடன் விநாயகர், திருக்கடையூர் நடராஜர், சிவகாமி அம்மன், அர்த்தநாரீஸ்வரர், வல்லப கணபதி உடன் அம்மன் என பழமையான ஆறு ஐம்பொன் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்ததுடன் ராமலிங்கத்தையும் கைது செய்தனர்.
இது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கூறுகையில், `ராமலிங்கம் பழைமையான ஐம்பொன் சாமி சிலைகள் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து அவருடைய நிறுவனத்தில் சோதனை நடத்தியதுடன் ஆறு சிலைகளை பறிமுதல் செய்தோம். அவரிடம் நடத்திய விசாரணையில் பல நூறு கோடி மதிப்புடைய அந்த சாமி சிலைகளை தென்னாப்பிரிக்கா நாட்டில் உள்ள சிசோன்கே என்ற தனியார் நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்து விற்பனை செய்ய இருந்ததையும் ஒப்புக்கொண்டார்.
ராமலிங்கத்திடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளின் மதிப்பு சர்வதேச சந்தைகளில் பல நுாறு கோடி ரூபாய். 2015-ம் ஆண்டிலேயே அந்த சிலைகளை ராமலிங்கம் வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக மத்திய தொல்லியல் துறையிடம் அனுமதி கேட்டுள்ளார். ஆனால் சிலைகள் பழைமையானவையாக இருந்ததால் தொல்லியல்துறை அதிகாரிகள் அவரின் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிலைகள் தொடர்பாக ராமலிங்கத்திமிருந்து சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதனை ஆய்வு மேற்கொண்டதில் சிலைகள் எந்த கோயிலுக்கு சொந்தமானது அதன் தோற்றம் உள்ளிட்டவையும் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை. அந்த சிலைகள் ராமலிங்கத்திற்கு எப்படி கிடைத்தது, இதில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறது. யார் மூலமாக தென்னாப்பிரிக்காவுக்கு கடத்தி விற்பனை செய்ய முயன்றார் என்பது குறித்து விசாரணை தொடர்ந்து வருகிறது” எனத் தெரிவித்தனர்.